
சென்னை ராமாபுரத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த மெட்ரோ கட்டுமானத்தில் இருந்து தூண்கள் சரிந்து விழுந்ததில், ரமேஷ் என்கிற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
3 புதிய வழித்தடங்களுடன் கூடிய சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட திட்டப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் சோழிங்கநல்லூரில் இருந்து மாதவரம் பால் பண்ணை வரையிலான வழித்தடத்தில், ராமாபுரத்தில் இருந்து போரூர் வரையிலான கட்டுமானப் பணிகள் இரவு பகலாக நடந்து வந்தன.
இந்நிலையில், ராமாபுரத்தில் அமைந்துள்ள டிஎல்எஃப் தொழில்நுட்ப பூங்கா மற்றும் எல் அண்டு டி நிறுவனத்திற்கு இடையிலான மெட்ரோ கட்டுமானத்தில் அமைக்கப்பட்டிருந்த, பல டன் எடைகொண்ட ராட்சத் கான்கிரீட் காரிடார் 20 அடி உயரத்தில் இருந்து திடீரென நேற்று (ஜூன் 12) இரவு சாலையில் விழுந்தது.
அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஒருவர் மீது இந்த காரிடார் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதன்பிறகு, உயிரிழந்த நபரின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். உயிரிழந்த நபரின் பெயர் ரமேஷ் (42) என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ள மெட்ரோ நிர்வாகம், ஒரு வாரத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட இரு தூண்கள், இணைப்பு பாலம் சரிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டது என்றும், இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது.