இன்று (செப்.21) சென்னையில் நடந்த அரசு விழாவில், பழனி பஞ்சாமிர்தத்தின் தயாரிப்புக்கு ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு.
திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை கிளம்பிய நிலையில், பழனி பால தண்டாயுதபாணி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தின் தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தபட்டதாக நேற்று (செப்.20) வதந்தி பரவியது.
இந்நிலையில் இந்த வதந்தி தொடர்பாக இன்று காலை நடந்த அரசு விழாவில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. அவர் பேசியவை பின்வருமாறு:
`2021-ல் திமுக ஆட்சி அமைந்தவுடன், திருக்கோவில்களின் பயன்பாட்டுக்கு ஆவின் நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்யவேண்டும் என்று அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களுக்கும் தமிழக முதல்வரின் உத்தரவின் கீழ் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
நேற்று இந்த விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட செல்வக்குமார், பாஜகவைச் சேர்ந்த வினோஜ் செல்வம் என, இந்த இருவர் மீதும் பழனி கோயில் பஞ்சாமிர்தத் தயாரிப்புப் பிரிவின் கண்காணிப்பாளர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இவ்வாறு பொய்யான வதந்தியைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பழனி பஞ்சாமிர்தத் தயாரிப்பில் முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது. பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச மற்றும் கட்டணப் பஞ்சாமிர்தங்கள் தரத்துடன் வழங்கப்படுகின்றன. இந்த ஆட்சியை இறையன்பர்களுக்கு எதிரான ஆட்சியாகக் காண்பிக்க சிலர் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
அவர்களின் கனவுகளைத் தகர்க்கும் வகையில் திராவிட மாடல் முதல்வர் அவர்கள் பல்வேறு புதிய திட்டங்களை இந்து சமய அறநிலையத்துறைக்கு வழங்கி வருகிறார்' என்றார்.