விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்: திருமாவளவன்

கட்சி நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதால் ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை.
விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்: திருமாவளவன்
1 min read

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆறு மாத காலத்திற்கு ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

`எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் கடந்த டிச. 7-ல் நடைபெற்றது. இந்த விழாவில், தவெக தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இதில் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என திமுகவுக்கு எதிராகப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், `கட்சியில் உள்ள பத்து துணைப் பொதுச்செயலாளர்கள் ஒருவர் ஆதவ் அர்ஜுனா. துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் உள்ளவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறும்போது தலைவர், பொதுச்செயலாளர் அடங்கிய உயர்நிலைக்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும்’ என்றார்.

இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் இன்று (டிச.9) வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,

`கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது. இது குறித்து கடந்த டிச. 7-ல் கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும் அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாக தோன்றினாலும், அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள் ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் கட்சியினருக்கு இது ஒரு `தவறான முன்மாதிரியாக’ அமைந்துவிடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.

இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில் ஆதவ் அர்ஜூனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, ஆதவ் அர்ஜூனா விசிகவிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in