விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகல்!

கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன்.
விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகல்!
1 min read

விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த ஆதவ் அர்ஜுனா, கட்சியில் இருந்து விலகுவதாக விசிக தலைவர் தொல் திருமாவளவனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு இன்று (டிச.15) ஆதவ் அர்ஜுனா அனுப்பிய கடிதம் பின்வருமாறு,

`விசிகவின் வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். எனக்குக் கொடுக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கான பொறுப்புகளோடு கடந்த இரண்டு ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினேன்.

எளிய மக்கள் குறிப்பாக, 'சாதிய ஆதிக்கத்தினால் காலம்காலமாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தை அடைய வேண்டும்' என்ற நோக்கில்தான் நமது கட்சியில் நான் இணைந்தேன். விடுதலைச் சிறுத்தைகள் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை.

கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது.

அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை. ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன்.

இனி வருங்காலங்களில், 'சாதி ஒழிப்பு, சமூக நீதி, எளிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் என்ற நிலைப்பாட்டோடு மதப் பெரும்பான்மைவாதம், பெண்ணடிமைத்தனம், மக்களை வஞ்சிக்கும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும்' அரசியல் போராட்டங்களில் தங்களுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன்.

எனவே, என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன். அரசியலில் என்னை நேரடியாகக் களமாடச் செய்த தங்களுக்கும் விசிக தோழர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன். இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்த்துகளுடன், மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in