
எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்காக விரைவில் பிரச்சாரம் என்ற தலைப்பில் இன்று (டிச. 10) ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள காணொளியில் திமுகவுடன் தனக்கு இருக்கும் உறவு குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.
'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம் என்ற தலைப்பில் வெளியான காணொளியில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு,
`அடுத்த தலைமுறையிடம் அரசியலை சரியான வழியில் கொண்டு சேர்க்கும் நோக்கில் தொடங்கப்பட்டது வாய்ஸ் ஆஃப் காமன்ஸ். இதைத் தொடங்கியவர் தமிழகத்தின் தேர்தல் அரசியல் ஆய்வாளர் ஆதவ் அர்ஜுனா.
பெரியாரின் கொள்கைகளுக்கு ஆட்சியின் மூலம் செயல்வடிவம் கொடுத்தார் பேரறிஞர் அண்ணா. அதேநேரம் புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியல் கருத்துகள் செயல்வடிவம் பெறமுடியவில்லை. ஏனென்றால் தேர்தல் அரசியலில் அவரது கொள்கைகளை செயல்படுத்தும் ஆட்சி அமையவில்லை.
ஒரு அரசியல் கொள்கையானது செயல்வடிவம் பெறுவதற்கு தேர்தல் அரசியலே பிரதானம் என்பது ஆதவ் அர்ஜுனாவுக்குப் புரிந்தது. தேர்தல் அரசியல் குறித்து ஆய்வுசெய்யும் பணியை அவர் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக 2015-ல் திமுகவுக்கு தேர்தல் வியூகங்களை வகுக்கும் குழுவில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று நடத்தினார்.
இதைத் தொடர்ந்து திமுக தேர்தல் வெற்றியை எளிதாக்க 2019-ல் ஒன் மைண்ட் இந்தியா என்ற நிறுவனத்தை தொடங்கினார் ஆதவ் அர்ஜுனா. இந்த நிறுவனம் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பகுப்பாய்வுசெய்து தேர்தல் வியூகத்தை கட்டமைத்தது. திமுகவுக்கான புதிய தேர்தல் உத்திகளை மேற்கொள்ள பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்தார் ஆதவ் அர்ஜுனா.
அவருடன் இணைந்து 2021 தேர்தல் களத்தில் முக்கியப் பங்காற்றினார் ஆதவ் அர்ஜுனா. சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. அதன்பின் அடித்தட்டு மக்களுக்கும் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்துகொடுத்து ஏற்றத் தாழ்வு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஒன் மைண்ட் இந்தியா நிறுவனம் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் இயக்கமாக உருவெடுத்தது.
விசிகவுடன் 2020-ல் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் கைகோர்த்தது. கட்சி நிர்வாகத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தொடங்கி டிஜிட்டல் முறையில் தரவுகளைக் கையாள தனி டாஷ்போர்டு கொண்டுவரப்பட்டது. பெரிய கட்சிகளுக்கு இணையாக 15 ஆயிரம் வாக்கு சாவடி முகவர்களுக்கான பூத் கமிட்டி பயிற்சி கூட்டம் ஒரு மாநாடுபோல சென்னையில் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற விசிகவின் வெல்லும் சனநாயகம் மாநாடு இந்திய அரசியலுக்கே திருப்புமுனையாக மாறியது. அந்த மாநாட்டை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைப்படி ஒருங்கிணைத்து முன்னின்று நடத்தியது வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் டிஜிட்டல் பிரச்சாரத்திற்கு அடித்தளமிட்டது வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்.
ஒரு நேர்மையான மக்களுக்கான அரசு அமைய ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வு என்ற முழக்கத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறது வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனம். தேர்தல் அரசியலை அனைவருக்குமான இடமாக வென்றெடுக்கும் ஒரு இயக்கமாக விரைவில் வீர நடைபோடவுள்ளது வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்'.