
ஆணவக்கொலைகளை தடுக்கத் தனிச்சட்டத்தை இயற்றக்கோரி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விசிக தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் ஆகியோர் இன்று (ஆக. 6) முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் பேசியதாவது,
`(ஆணவக் கொலைகளைத் தடுக்க) ஏற்கனவே இருக்கும் சட்டம் போதுமானது புதிய சட்டம் தேவையில்லை என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு என்று புதிய சட்டம் தனிச்சட்டம் சிறப்பு சட்டம் தேவை என்பதை கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு அமைப்புகள், ஜனநாயக சக்திகள் வலியுறுத்தி வருகின்றன.
அவற்றையெல்லாம் இன்று முதலமைச்சரை நாங்கள் சந்தித்துப் பேசியபோது வழங்கிய கோரிக்கை மனுவில் கோடிட்டுக் காட்டியிருக்கிறோம். குறிப்பாக, ஆணவக்கொலைகளைத் தடுக்க புதிய சட்டம் தேவை என்று தேசிய பெண்கள் ஆணையம் 2010-ல் முன்மொழிந்துள்ளது, அதை சுட்டிக்காட்டியுள்ளோம்.
அதைப்போல 2012-ல் இந்திய சட்ட ஆணையம் தனிச்சட்டம் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2015-ல் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தனிநபர் சட்டமுன்வடிவை எம்.எல்.ஏ. சௌந்தரராஜன் முன்மொழிந்துள்ளார்.
ஒரு வழக்கில் சிறப்புச் சட்டத்தின் தேவையை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. அந்த சட்டம் நிறைவேற்றப்படும் வரையில் மாநில அரசுகள் குறிப்பாக காவல்துறையினர் எவ்வாறு செயல்படவேண்டும் என்கிற வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அந்த தீர்ப்பு விரிவாக வழங்கியுள்ளது.
இந்த அனைத்தையும் முதல்வருக்கு நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம். எனவே முதல்வர் இதை பரிசீலிக்கவேண்டும். இது எஸ்.சி., எஸ்.சி. அல்லாதோருக்கு இடையிலான பிரச்னை அல்ல, ஒட்டுமொத்த சமூகப் பிரச்னை. அனைத்து சாதியினருக்கும் இடையே இதுபோல காதல் திருமணம் நடந்தால் படுகொலைகள் நடக்கின்றன.
இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நடக்கிறது. தேசிய அளவில் சட்டம்வேண்டும் என்றாலும்கூட, மாநில அரசுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் இருக்கிறது என்ற நிலையில்தான் முதல்வரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்’ என்றார்.