
போரூர்-பூந்தமல்லி இடையே 90 சதவீத மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நிறைவுபெற்றுள்ளதாகவும், டிசம்பர் 2025-ல் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை இயக்கத்திற்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
ரூ. 69,180 கோடி செலவில் திட்டமிடப்பட்டு கடந்த 2019-ல் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. இதில், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ. தொலைவிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை 26.1 கி.மீ. தொலைவிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 44.6 கி.மீ. தொலைவிலும் மூன்று புதிய வழித்தடங்கள் திட்டமிடப்பட்டன.
இந்த திட்டத்திற்காக கடந்த 2019 தொடங்கி ரூ. 19,229 கோடி நிதியை மாநில அரசு செலவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த திட்டத்திற்காக 65 சதவீத நிதி பங்களிப்பை வழங்குவதாக கடந்த அக்டோபரில் மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை அமைக்கப்பட்டுவரும் மஞ்சள் வழித்தடத்தில், போரூர் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையிலான மெட்ரோ திட்டப் பணிகளில் சுமார் 90 சதவீதம் வரை நிறைவுபெற்றுள்ளதாக அறிவித்துள்ளார் சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் (திட்டங்கள்) அர்ஜுனன்.
போரூர் தொடங்கி பூந்தமல்லி வரை மொத்தம் 10 மெட்ரொ ரயில் நிலையங்கள் அமையவுள்ளன. இதில் தற்போது வரை 90 சதவீத பணிகள் நிறைவுபெற்றுள்ளன. வரும் பிப்ரவரியில் 100 சதவீத பணிகள் நிறைவடைந்த பிறகு, மார்ச்-ஏப்ரலில் 90 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார் அர்ஜுனன்.
இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதற்குப் பிறகு, போரூர்-பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவை 2025 டிசம்பரில் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.