
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (டிச. 12) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 நபர்கள் வரை உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாநகரின் காந்திஜி நகரில் செயல்பட்டு வருகிறது சிட்டி மருத்துவமனை. இன்று இரவு 9 மணி அளவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு தீயணைப்பு வாகனங்களை உபயோகித்து தண்ணீர் மூலம் தீயை அணைத்தனர்.
நான்கு மாடிக் கட்டடத்தைக் கொண்ட இந்த மருத்துவமனையில், தீ விபத்து ஏற்பட்டபோது, மருத்துவப் பணியாளர்களுடன் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தீ விபத்தால் சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்தாக முதற்கட்ட தகவல்கள் வெளியிடப்பட்டது.
தீ அணைக்கப்பட்டதும் 50-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றும் பணி நடைபெற்றது. மேலும், மின்கசிவு ஏற்பட்டத்தை அடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மருத்துவமனை லிப்டில் 6 பேர் சிக்கிக்கொண்டனர். பின்பு தீயணைப்பு வீரர்களால் அவர்களும் மீட்கப்பட்டனர்.
தீ விபத்து குறித்த தகவல் வெளியானதும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்தனர்.