மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஹிந்து முன்னணி சார்பில் மதுரை பாண்டி கோயில் அருகேவுள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கிய இந்த மாநாடு இரவு 9 மணி வரை நடைபெற்றது. ஆதீனங்களின் குரு மகா சந்நிதானங்கள், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், ஹிந்து முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றார்கள். சிறப்பு அழைப்பாளராக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.
முருக பக்தர்கள் மாநாட்டில் மொத்தம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பாராட்டுகள்.
குன்றமெல்லாம் குமரனுக்கே சொந்தம்
கோயில்களை வியாபாரத் தலமாக்கக் கூடாது.
தேச மற்றும் ஹிந்து விரோதிகளுக்கு வாக்களிக்கக் கூடாது.
சஷ்டி தோறும் கோயில்களில் கந்த சஷ்டி கவசம் பாடுவோம்.
இந்த மாநாட்டில் நயினார் நாகேந்திரன் உரையாற்றியதாவது:
"மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு நடக்கக் கூடாது என சிலர் நினைத்தார்கள். ஆனால், தடைக்கற்களை எல்லாம் படிக்கற்களாக மாற்றி இந்த மாநாடு இன்று மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லாம் ஒரே கலாசாரம், பண்பாடு. நமது கலாசாரம் என்பது ஒருமித்த கலாசாரம். இந்தக் கலாசாரம் மாறிவிடக் கூடாது என்பதற்காக தான் முருக பக்தர் மாநாடு. முருகனில் 'மு' என்றால் முகுந்தன் என்று பொருள். முகுந்தன் என்று சொன்னால் திருமால் என்று பொருள். 'ரு' என்றால் ருத்ரன் என்று பொருள். ருத்ரன் என்றால் சிவன் என்று பொருள். 'க' என்றால் கமலத் தாமரையில் அமர்ந்திருக்கக்கூடிய பிரம்மா என்று பொருள். ஆக முருகா என்று சொன்னால், இந்த மூன்று வேதங்களும் மூன்று கடவுள்களும் அடங்கியிருக்கிறது என்பதை நம்மால் உணர முடியும். தமிழ்க் கடவுள் முருகன் என்று சொல்கிறோம். மு, ரு, கா என்பதில் மெல்லினம், இடையினம், வல்லினம் இருக்கிறது" என்று நயினார் நாகேந்திரன் உரையாற்றினார்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
"இதுபோன்ற மாநாடுகள் இன்னும் நடக்கும். நடந்துகொண்டே இருக்கும். ஒரு பிரச்னை வரும்போதெல்லாம் நாம் ஒன்று சேருவோம். அதைவிட முக்கியம் எதற்காக ஒன்று சேருகிறோம் என்பது முக்கியம். நாம் யாருக்கும் எதிரி கிடையாது. இரு நாடுகளில் மட்டும் நாம் பெரும்பான்மையாக இருந்தாலும்கூட நாம் யாருக்கும் எதிரி கிடையாது. நம்மை எதிரியாக நினைப்பவர்களுக்கு நாம் எதிரி என்பதில் மிகமிக தெளிவாக இருக்க வேண்டும்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நீ எந்த வாழ்வியல் முறையைப் பின்பற்றுகிறாய்? ஹிந்து மதமா என்கிற ஒரே காரணத்துக்காக 26 மனிதர்களைத் தனித்தனியாக நிறுத்தி சுட்டுக்கொன்றுவிட்டு இந்த மதம் இருக்கக் கூடாது என்று ஒருவன் நினைக்கிறான். பதிலுக்குப் பதிலாக எல்லை தாண்டி அந்தப் பயங்கரவாத நாட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பி வரும்போது தான் நம் நாட்டில் சிலருக்குப் பிரச்னையாக இருக்கிறது. இஸ்ரேல், அமெரிக்கா எப்படி நிற்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இந்தியர்கள் நாம் முதன்முதலாகப் பார்க்கின்றோம். நம் கண்முன் நாம் வாழக்கூடிய சமகாலத்தில் நாமும் எழுந்து நிற்கிறோம். என்னுடைய வாழ்வியல் முறைக்குப் பிரச்னை வந்தால், எழுந்து நிற்பேன், திருப்பி அடிப்பேன் என்று.
ஹிந்துக்களை பொறுத்தவரை சின்னதாக யாராவது தொந்தரவு செய்தால், நாம் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டோம். பெரிதாகத் தொந்தரவு செய்தாலும் கூட கண்டுகொள்ள மாட்டோம், மன்னித்துவிட்டு கடந்துவிடுவோம். ஆனால், இன்று அதையெல்லாம் தாண்டி நம் வாழ்வியல் முறைக்குத் தொடர்ச்சியாகப் பிரச்னைகள் வந்துகொண்டிருக்கின்றன. ஹிந்து என்பதற்காக நம் கடைக்கோடி தொண்டர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த மதத்தைப் பின்பற்றினால் மட்டும் நம் வாக்கைப் பெற்று அரசியல்வாதிகளாக அதிகாரத்தில் இருக்கக் கூடியவர்கள், கோயில் கூம்பு மாதிரி இருக்கும் என அசிங்கப்படுத்துகிறார்கள். ஹிந்து மக்களிடம் ஒன்றுமை எப்போதும் வராது என்கிற தைரியத்தில் அரசியல்வாதிகள் இன்னும் பழைய அரசியலைச் செய்து வருகிறார்கள். அதையெல்லாம் உடைத்துக் காட்ட வேண்டும். என்னுடைய கோயில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். எங்களுடைய வாழ்வியல் முறையில் எந்தப் பிரச்னையும் வரக் கூடாது. இதற்காக இந்த முருகர் மாநாடு தேவைப்படுகிறது.
ஒரு பக்கம் எழுச்சி... ஆளும் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி. 5 லட்சம் பேர் மதுரையில் காசு கொடுக்காமல் கொள்கைக்காக மழை வரும் என்று தெரிந்தும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதைத் தெரிந்தும் இது என்னுடைய மாநாடு என் வாழ்வியல் முறையைக் காட்டும் மாநாடு என்று வந்திருக்கிறீர்கள். இந்த எச்சரிக்கை மணி அங்கு போகும்" என்று அண்ணாமலை பேசினார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியதாவது:
"இங்கு சிலர் நிறத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். நமக்கு நிறத்தில் எந்தப் பேதமும் இல்லை. கிருஷ்ணர், காளி எல்லாம் கருப்பு. நாம் அகத்தின் வழியாகவே பார்க்கிறோம். ஆனால், இங்கு கருப்பு நிறத்தை வைத்து கடவுளை சீண்டும் கூட்டம் உள்ளது. நம்மை இணைக்கும் முருகனைச் சீண்டிப் பார்க்கிறது ஒரு கூட்டம். கந்த சஷ்டி கவசத்தை கிண்டல் செய்தார்கள். அவர்களுக்கு கிண்டல் செய்யும் உரிமை உள்ளது. அந்த உரிமையும் ஜனநாயகம் கொடுத்துள்ளது. அவர்கள் என் கடவுளைக் கேலி செய்தார்கள். என் கலாசாரத்தைக் கேலி செய்தார்கள். என் பண்பாட்டை கேலி செய்தார்கள். என் பார்வையைக் கேலி செய்தார்கள். கேட்டால், இது தான் மதச்சார்பின்மை என்பார்கள். மற்றவர்கள் நம்பிக்கையைக் கொச்சைப்படுத்த அவர்கள் யார்? முருகனைக் கேள்வி கேட்க அவர்கள் யார்? அறத்தை அசைத்துப் பார்க்க அவர்கள் யார்? அவர்களால் மற்ற மதங்களைப் பற்றி இதுபோல பேச முடியுமா? அரேபியாவிலிருந்து வந்த மதங்கள் பற்றி அவர்களால் இப்படி பேச முடியுமா? நம் மதத்தைப் பற்றி மட்டும் ஏன் இப்படி பேசுகிறார்கள்? நாம் அமைதியானவர்கள். எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளக்கூடியவர்கள். பொறுமை என்பது கோழைத்தனம் அல்ல. இங்குள்ள முருக பக்தர்கள் அனைவரும் ஒரு பார்வை பார்த்தாலே போதும். நம் கடவுளைத் திட்டும் கூட்டம் காணாத கூட்டம் ஆகிவிடும். சிவபெருமானின் நெற்றிக் கண்ணைத் திறந்த பூமி இது. இந்தக் கூட்டம் வரும், நாளை மற்றொரு கூட்டம் வரும். முருகனைப் பற்றி இழிவாகச் சொன்னால், உங்கள் இதயம் நொறுங்க வேண்டாமா?
இந்த மாநாட்டிலேயே ஒரு முடிவுக்கு வருவோம். நான் உங்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன். அநீதியைத் தட்டிக் கேட்க திரள்வோம். அறத்தைக் காக்க அனைவரும் எழுவோம். முருக நீதியைக் காப்பாற்ற புறப்படுவோம். திட்டும் கூட்டத்தை இந்த முருகப் படை தகர்க்கும்" என்று பவன் கல்யாண் பேசினார்.