
சென்னையில் 15 வயது சிறுமி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 6 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தனர் முஹமது நிஷாத், நாசியா தம்பதியினர். இவர்களது இல்லத்தில் வீட்டுவேலை செய்ய தஞ்சாவூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் பணியமர்த்தப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த நவ.1-ல் முஹமத் நிஷாத் இல்லத்தில் இருந்து காவல்துறையினரால் சடலமாக மீட்கப்பட்டார் அந்தச் சிறுமி.
சிறுமியின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் இருந்ததால், அவர் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த சிறுமியைத் தான் தாக்கியதை ஒப்புக்கொண்டார் முஹமது நிஷாத்.
தஞ்சாவூரைச் சேர்ந்த சிறுமியின் குடும்பம் ஏழ்மையான பிண்ணனியைச் சேர்ந்தது. சம்பளம் இல்லாமல் சிறுமிக்கு 3 வேளை உணவு மட்டுமே வழங்கப்படும் என சிறுமியின் பெற்றோருடன் வாய்மொழி ஒப்பந்தம் போட்டு, சிறுமியை வேலைக்குச் சேர்த்துள்ளார் நிஷாத். ஆனால் நிஷாத்தும் அவரது குடும்பத்தினரும், அவரது நண்பரின் குடும்பத்தினரும் வேலை வாங்குகிறோம் என்ற பெயரில் சிறுமியை அடிக்கடி அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
கொலை நடந்த தினத்தன்று வழக்கம்போல சிறுமியை அடித்து உதைத்துள்ளனர் நிஷாத் குடும்பத்தினர். மேலும் அடி வாங்கி கீழே சரிந்த சிறுமியின் கழுத்தில் தண்ணீர் டியூப்பை சுற்றி இழுத்துச் சென்று குளியல் அறையில் போட்டுள்ளார் நிஷாத். இதை அடுத்து அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலை விவகாரத்தில் முஹமது நிஷாத், அவரது மனைவி நாசியா, கோவிலாம்பாக்கத்தைச் சேர்ந்த லோகேஷ், அவரது மனைவி ஜெயசக்தி, நிஷாத்தின் சகோதரி சீமா பேகம் மற்றும் கோவிலாம்பாக்கத்தை சேர்ந்த மகேஸ்வரி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கின் தீவிரத்தன்மை கருதி, இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண். மேலும், கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.