
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை, சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறையினரால் இன்று (அக்.3) தாக்கல் செய்யப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ல் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இதுவரை 28 நபர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நபர்களில் பொன்னை பாலு, அருள், திருமலை, அஸ்வத்தாமன், அஞ்சலை, பொற்கொடி உள்ளிட்ட 25 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள திருவேங்கடம் என்ற ரௌடி கடந்த ஜூலை 14-ல் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 5000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறையினரால் இன்று (அக்.3) தாக்கல் செய்யப்பட்டது.
இதுவரை 28 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், தலைமறைவாக உள்ள ரௌடி சம்போ செந்தில் மற்றும் அவரது கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் ஆகிய இருவரையும் இணைத்து, மொத்தம் 30 நபர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.