திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் வெட்டிக் கொலை: 5 பேர் கைது | Trichy Murder |

ஓட ஓட விரட்டிக் காவலர் வீட்டுக்குள்ளேயே வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்...
திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் வெட்டிக் கொலை
திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் வெட்டிக் கொலை
2 min read

திருச்சி பீமநகர் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஐந்து பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி பீமநகர் கீழத்தெருவை சேர்ந்த தாமரைச்செல்வன் என்ற இளைஞர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது எதிரில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், அவர் மீது மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தாமரைச்செல்வனை அந்தக் கும்பல் தாக்கத் தொடங்கியது. அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கப்பட்டதை அடுத்து, உயிரைக் காத்துக்கொள்ளத் தப்பி ஓடிய தாமரைச்செல்வன், அருகிலிருந்த காவலர் குடியிருப்புக்குள் அடைக்கலம் தேடி நுழைந்துள்ளார்.

அங்கு போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் என்பவரது வீட்டுக்குள் நுழைந்த தாமரைச்செல்வனை அந்தக் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாநகர வடக்கு துணை ஆணையர் சிபின், விசாரணை மேற்கொண்டார். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் சதீஷ், பிரபாகரன், நந்து, கணேசன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் விசாரித்ததில், ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தாமரைச்செல்வனுக்கும் சதீஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு, அவர் சதீஷை அடித்தது தெரிய வந்தது. இதற்காகப் பழிவாங்கும் நோக்கில் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே ஒருவரைக் காவல்துறை கைது செய்துள்ள நிலையில், கைதான 4 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என யாருக்குமே பாதுகாப்பில்லாத நிலையில் தமிழ்நாடு தரம் தாழ்ந்திருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டதாவது:-

“திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. இதன் உச்சகட்டமாக, இன்று காலை, திருச்சி மாநகர் பீமநகர் மார்சிங் பேட்டையில், பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில், குறிப்பாக காவலர் குடியிருப்பு உள்ளேயே புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்திருப்பது, பொதுமக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தற்போது திருச்சியில் தான் தங்கியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, காவலர் குடியிருப்பிலேயே இப்படி ஒரு படுகொலை நடப்பது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கின் அவலநிலையைக் காட்டுகிறது. பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என யாருக்குமே பாதுகாப்பில்லாத நிலையில் தமிழ்நாடு தரம் தாழ்ந்திருக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருப்பது, தமிழ்நாட்டின் சாபக்கேடு” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://x.com/annamalai_k/status/1987756419651977714?s=20

Summary

Police have arrested five persons in connection with the murder of a youth in the Beema nagar police quarters in Trichy.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in