
கடந்த டிச.27-ல் தொடங்கிய 48-வது சென்னை புத்தகக்காட்சி நேற்றுடன் (ஜன.12) நிறைவுபெற்றது. இதில் சுமார் ரூ. 20 கோடிக்குப் புத்தக விற்பனை நடைபெற்றுள்ளதாக பபாசி அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் வருடந்தோறும் சென்னையில் புத்தகக்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த டிச.27-ல் ஒய்எம்சிஏ திடலில் 48-வது சென்னை புத்தகக்காட்சியைத் தொடங்கிவைத்தார் தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
மொத்தம் 17 நாட்கள் திட்டமிடப்பட்டிருந்த புத்தகக் காட்சியின் இறுதி நாளான நேற்று (ஜன.12) நடைபெற்ற நிறைவு விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில், பதிப்புத் துறையில் 25 மற்றும் 50 ஆண்டுகளை நிறைவுசெய்த 14 நபர்களுக்குச் சிறப்பு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இந்தப் புத்தகக் காட்சியை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் பார்வையிட்டதாகவும், சுமார் ரூ. 20 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாகவும் பபாசி அமைப்பு தகவல் தெரிவித்தது. கடந்த 47-வது சென்னை புத்தகக்காட்சியை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் பார்வையிட்டதாகவும், சுமார் ரூ. 18 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானதாகவும் அப்போது தகவல் தெரிவிக்கப்பட்டது.
நடப்பாண்டில், குழந்தைகளுக்கான நூல்கள், அறிவியல் நூல்கள், சிறுகதை மற்றும் கவிதைத் தொகுப்புகள், மொழி பெயர்ப்புப் நூல்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் ஆகியவற்றுக்கு அதிக வரவேற்பு கிடைத்ததாக பதிப்பாளர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.