
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 24 மணி நேரத்தில் 43.8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 43.8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நவம்பர் 20 காலை 8.30 மணி முதல் நவம்பர் 21 காலை 8.30 மணி வரை இந்த மழையானது கொட்டித் தீர்த்துள்ளது.
இதில் 3 மணி நேரத்தில் 36.2 செ.மீ., 10 மணி நேரத்தில் 41.1 செ.மீ. என்கிற அளவில் மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் பெய்த அதிகனமழையை அவர் சூப்பர் மேக வெடிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரத்துக்கு அடுத்தபடியாக தங்கச்சிமடத்தில் 33.8 செ.மீ., பாம்பனில் 28 செ.மீ., மண்டபத்தில் 27.1 செ.மீ என்கிற அளவில் மழை பெய்துள்ளது.
ராமேஸ்வரத்துக்கு அடுத்தபடியாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 16.7 செ.மீ. அளவில் மழை பெய்துள்ளது. ராமநாதபுரத்தில் 12.5 செ.மீ. அளவில் மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மற்றும் வேளாங்கண்ணியில் முறையே 12. செ.மீ. மற்றும் 11.1 செ.மீ. என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.
ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.