தமிழக வளர்ச்சிக்கு முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்ட 4 அறிக்கைகள்: அம்சங்கள் என்னென்ன?

தமிழகத்தில் வேளாண் பணிகளிலிருந்து அதிகளவில் வேறு துறைகளுக்கு தொழிலாளர்கள் மாறும் நிலை காணப்படுகிறது.
தமிழக வளர்ச்சிக்கு முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்ட 4 அறிக்கைகள்: அம்சங்கள் என்னென்ன?
2 min read

மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 முக்கிய அறிக்கைகள், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இன்று (ஜூன் 9) சமர்ப்பிக்கப்பட்டன.

துணை முதல்வரும் மாநில திட்டக் குழுவின் அலுவல் சாரா துணைத் தலைவருமான உதயநிதி ஸ்டாலினும், திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவருமான முனைவர் ஜெயரஞ்சனும், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று (ஜூன் 9) சந்தித்தனர்,

மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட, தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030 - தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம், தமிழ்நாட்டில் ஆட்டோமோட்டிவ் (வாகன உற்பத்தி) துறையின் எதிர்காலம் மற்றும் அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி - தமிழ்நாட்டை வடிவமைக்கும் பாதை, ஆகிய நான்கு அறிக்கைகள் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள்:

தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் வேளாண் சாரா பணிகளில் தன்மை மற்றும் அளவினை அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் வேளாண் சாரா வேலைவாய்ப்பு குறித்த ஆய்வு மாநிலத் திட்டக் குழுவால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில், வேளாண் பணிகளிலிருந்து அதிகளவில் வேறு துறைகளுக்கு மாறும் நிலை காணப்படுகிறது. கட்டடம் மற்றும் உற்பத்தி துறைகள் போன்ற வேளாண்மை சாராத துறைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது ஊரக வாழ்வாதாரத்தில் ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றத்தைக் காட்டுகிறது.

அதிக ஊதியமும் நிலையான வேலைவாய்ப்புகளும் இளைஞர்களை வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகளுக்கு ஈர்த்துள்ளன. கட்டடத் தொழில் இளைஞர்களிடையே முதன்மையான துறையாகவும், பெண்களிடையே உற்பத்தித்துறை முக்கிய வேலைவாய்ப்பு துறையாகவும் உருவெடுத்துள்ளது.

நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030 - `நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம்’:

தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் சார்பில், மாநில திட்டக் குழுவால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, 2030-ம் ஆண்டுக்கான வளர்ச்சி திட்டமான நீடித்த வளர்ச்சி இலக்குகளின் கீழ் உள்ள 17 இலக்குகள் வாரியாக அத்தியாயங்களை இந்த ஆவணம் கொண்டுள்ளது.

பல்வேறு இலக்குகளில் மாநிலத்தின் தற்போதைய நிலை மற்றும் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு நலத்திட்டங்கள், சிறப்பு முயற்சிகள் மற்றும் கொள்கை உருவாக்கங்கள் மூலம் தமிழக அரசின் முன்னெடுப்புகளை இந்த ஆவணம் எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு இலக்கினை அடைவதற்கான உத்திகள் மற்றும் செயல் திட்டங்களையும் இது கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆட்டோமோட்டிவ் (வாகன உற்பத்தி) துறையின் எதிர்காலம்: வாகன உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, காலநிலைக்கு ஏற்ப மற்றும் நிலைத்த தன்மையுடன்கூடிய வலுவான அடித்தளத்தை உருவாக்க உள்ளது என்று இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

மின் வாகன உற்பத்தியில் முன்னணி மாநிலமாக இருப்பதால், 2030-ம் ஆண்டுக்குள் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு மின் வாகனம் அமைப்புகள், பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவற்றில் திறன்களை மேம்படுத்துவதன் அவசியத்தையும் இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.

தமிழ்நாட்டின் தொலைநோக்கு திட்டமான 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் பொருளாதார இலக்கை அடையவும் காலநிலைக்கு உகந்த மற்றும் புதுமைக்கான மையமாகவும் தமிழ்நாட்டை மாற்றிட இந்த அறிக்கை வழிவகை செய்கிறது.

தமிழ்நாட்டை அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி - வடிவமைக்கும் பாதை:

2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதாரமாக மாற்றும் தொலைநோக்கு திட்டத்தை இந்த் அறிக்கை முன்வைக்கிறது. உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் உற்பத்தித் துறையின் எதிர்காலம் ஆகிய இரு துறைகளிலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதை இவ்வறிக்கையில் தெளிவாக விளக்கப்படுகிறது.

தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் நிலைத்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு உற்பத்தித் துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்க இவ்வறிக்கை பரிந்துரைக்கிறது. குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையை வலுப்படுத்தல், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி, சமூக நீதி மற்றும் அறிவுசார் பரிணாமத்தை ஒருங்கிணைக்கும் விரிவான செயல்திட்டமாக இவ்வறிக்கை அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in