
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் தாக்கி, வயலில் வேலையில் இருந்த 4 பெண்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்கியுள்ளது. மேலும் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் விருதுநகர், தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடலூரில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த கழுதூர் கிராமத்தில் இன்று மாலை மழை பெய்தது. அப்போது வயலில் வேலையில் இருந்த பெண்கள் மீது மின்னல் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதில் பாரிஜாதம், ராஜேஸ்வரி, சின்னப் பொண்ணு, கணிதா ஆகிய நால்வர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானதாகக் கூறப்படுகிறது. மேலும், தவமணி என்பவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.