
சென்னையில் இன்று (அக்.6) நடைபெற்ற மெரினா விமான சாகச நிகழ்ச்சியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இதுவரை 5 நபர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு தினத்தை ஒட்டி இன்று சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 15 லட்சம் வரையிலான பொதுமக்கள் பங்கேற்றனர்.
வெயிலின் தாக்கம், கூட்ட நெரிசல் காரணமாக மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்த பொதுமக்களில் 200-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். இதில் 93 பேர் சிகிச்சைக்காக அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நபர்களில் இதுவரை ஜான், கார்த்திகேயன், சீனிவாசன் மற்றும் தினேஷ் குமார் உள்ளிட்ட 5 நபர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்த பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெயக்குமார் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜெயக்குமார், `10,000 பேர் பார்வையிட்ட கார் பந்தையத்துக்கு அவ்வளவு ஏற்பாடு செய்தனர், ஆனால் 15 லட்சம் பேர் வருவார்கள் என கணிக்கப்பட்ட விமான சாகச நிகழ்ச்சிக்கு போதிய ஏற்பாடுகளை செய்யவில்லை. இந்த உயிரிழப்புக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்’ என்றார்.