
திருவண்ணாமலை படவேடு பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் விஜயன். இவர் ரூ. 4 கோடி மதிப்புடைய சொத்துப் பத்திரத்தை படவேடு ரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் போட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக விஜயன் தெரிவித்துள்ளார். அம்மனுக்கு மட்டுமே இந்த சொத்து சென்றடைய வேண்டும் என விஜயன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த விஜயன் கூறியதாவது:
"மகள்கள் என்னை அப்பா என்று அழைத்தது கிடையாது. இருவரும் என்னிடம் சண்டை போட வந்துவிட்டார்கள். தங்களுடையப் பொருள்களைக் கொடுக்குமாறு ஆள்களை அழைத்து வந்திருந்தார்கள். பொருள்களைக் கொடுக்கிறேன் எடுத்துக்கொள்ளுங்கள் என்று நான் கூறினால், அடிப்பதற்கு ஆள் சுற்றி நிற்கிறார்கள். அப்போது நான் உள்ளே இருந்தேன்.
பிறகு, என்னை வெளியே வரச் சொன்னார்கள். வெளியே வந்தவுடன் என்ன என்று கேட்டேன். ஆள்கள் வந்துள்ளார்கள். என்னுடைய பொருள்கள் வேண்டும் என்று மகள் கேட்டார். பொருள்களை எடுத்துக் கொடுக்கிறேன். ஆள்கள் எதற்கு, இது குடும்ப விஷயம் என்றேன்.
இவர்கள் என்னை அடிக்கவே வந்துள்ளார்கள் என்பதை நினைத்துக்கொண்டேன். சரி மா நீ என்னை அப்பா என்று நினைக்கவில்லை. சின்ன மகளை என்னிடம் கொடு என்றேன். சின்ன மகளும் நீ எனக்கு அப்பா கிடையாது எனக் கூறினார்.
இரு மகள்களுக்கும் நான் அப்பா கிடையாது எனும்போது, உங்களுக்கு சொத்து தர முடியாது. 25 ஆண்டுகளாக மனைவியும் என்னைக் கவனிக்கவில்லை. நீங்களும் என்னை அப்பா என்று சொன்னது கிடையாது. அப்பா வேண்டாம் என்று தற்போது சொல்கிறீர்கள். எனவே, சொத்து அனைத்தையும் கோயில் போட்டுவிடுகிறேன் என்று முடிவு செய்தேன். இதை அவர்களிடத்தில் சொல்லவில்லை. சொத்துப் பத்திரத்தை எடுத்து வந்து எழுதி கோயில் உண்டியலில் போட்டுவிட்டேன். சொத்து மதிப்பு மொத்தம் ரூ. 4 கோடி இருக்கும்.
அசல் பத்திரத்தை எடுத்து வந்து, அதன் பின்பக்கம் இந்தச் சொத்து பத்திரத்தை மனப்பூர்வமாக அம்மனுக்குக் காணிக்கையாக தானமாகத் தருகிறேன் என்று எழுதி கையெழுத்து போட்டு கொடுத்துள்ளேன்.
முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என்பது பிறகு தான் தெரியவந்தது. கோயில் நிர்வாகத்திடம் வந்து கேட்டேன். நீங்கள் அப்படியே போட்டதால் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தார்கள். நீங்கள் பதிவு செய்து கொடுத்தால் எடுத்துக்கொள்வார்கள் என்றார்கள். நான் பதிவு செய்து வந்து கொடுக்கிறேன் என்றேன். நான் தானமாகக் கொடுத்தது அம்மனுக்கு தான் சென்றடைய வேண்டும். அம்மனின் அருள் எங்களுடைய பரம்பரையில் எல்லோரையும் சென்றடைய வேண்டும். ராணுவத்திலிருந்து வந்த பிறகு நானே சம்பாதித்த சொத்துகள் இவை" என்றார் அவர்.