இன்று (ஆகஸ்ட் 22) 385-வது சென்னை நாள் கொண்டாடப்படுகிறது. தற்போதைய சென்னை நகரம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் நகரமாக உருவானதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை நாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
17-வது நூற்றாண்டில் தற்போதைய சென்னை நகரப் பகுதி, மதராஸப்பட்டினம் என்ற பெயரில் விஜயநகர பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்தது. மதராஸப்பட்டினத்தை 22 ஆகஸ்ட் 1639-ல் வாங்கியது கிழக்கிந்திய கம்பெனி. அதன் பிறகு 1640-ல் கடலோரத்தை ஒட்டி புனித ஜார்ஜ் கோட்டை கட்டும் பணி தொடங்கப்பட்டு 1644-ல் கட்டி முடிக்கப்பட்டது.
புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றி ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் நகரம் உருவானது. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் மெட்ராஸ் மாகாணத்தின் தலைநகராக விளங்கியது மெட்ராஸ் நகரம்.
சுதந்திரத்துக்கு பிறகு 1950-களில் மேற்கொள்ளப்பட்ட மாநில மறுசீரமைப்பில் ஆந்திர பிரதேசம், கேரளா, கர்நாடகம், மெட்ராஸ் என தனித்தனி மாநிலங்கள் உருவாகின. இதில் மெட்ராஸ் மாநிலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது மெட்ராஸ் நகரம்.
அன்றைய அண்ணா தலைமையிலான திமுக அரசால் 14 ஜனவரி 1969-ல் மெட்ராஸ் மாநிலம், தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. பிறகு, 17 ஜூலை 1996-ல் மெட்ராஸ் நகரை சென்னை என்று பெயர் மாற்றியது தமிழக அரசு.
சென்னை நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, `சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது. வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை! இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம்! பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய - எழுதும் நம் சென்னையைக் கொண்டாடுவோம்!’ என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.