
சென்னையில் ராட்சத ராட்டினத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 36 பேர் அந்தரத்தில் சிக்கிக்கொண்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கு பூங்காவைத் தற்காலிகமாகத் திறக்க காவல் துறையினர் தடை விதித்துள்ளார்கள்.
சென்னை ஈஞ்சம்பாக்கம் ஈசிஆர் சாலையில் தனியார் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. இங்கு தண்ணீர் சார்ந்த விளையாட்டுகள், ராட்சத ராட்டினங்கள் என குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்குமான பொழுதுபோக்கு பூங்காவாகச் செயல்பட்டு வருகிறது. கோடை விடுமுறை என்பதால், இங்கு மக்கள் அதிகளவில் சென்று வருவதாகத் தெரிகிறது.
செவ்வாய்க்கிழமை மாலை இந்தப் பூங்காவில் ராட்சத ராட்டினம் வழக்கம்போல் செயல்பட்டுள்ளது. மக்களும் இதை அனுபவிக்க முயன்று ராட்டினத்தில் ஏறியிருக்கிறார்கள்.
ராட்சத ராட்டினம் இயங்கியபோது, ராட்டினத்தின் மோட்டாரிலிருந்து சப்தம் வந்ததாகத் தெரிகிறது. ஊடகங்களில் இவ்வாறு செய்தி வெளியாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராட்சத ராட்டினம் உடனடியாக நிறுத்தப்பட்டிருக்கிறது. ராட்சத ராட்டினம் பெரும் உயரத்திலிருந்தபோது நின்றிருக்கிறது.
இதனால், ராட்டினத்தில் இருந்த 36 பேரை மீட்பது சவாலாக இருந்துள்ளது. பொழுதுபோக்கு பூங்காவைச் சேர்ந்தவர்கள் கிரேன் உள்ளிட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். இருந்தபோதிலும், ராட்சத ராட்டினம் இருந்த உயரத்தை இவர்களால் அடையமுடியவில்லை.
இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு இதுதொடர்பாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ராட்சத ராட்டினத்தில் இருந்தவர்கள் சுமார் 3 மணி நேரம் அந்தரத்தில் சிக்கித் தவித்துள்ளார்கள். இவர்களில் குழந்தைகள் மற்றும் பெண்களும் இருந்திருக்கிறார்கள். தீயணைப்புத் துறையினர் ராட்சத கிரேன் மூலம் ராட்டினத்தில் சிக்கியிருந்தவர்களை வெற்றிகரமாக மீட்டுள்ளார்கள்.
முதலில் குழந்தைகள் மற்றும் பெண்களை மீட்டுள்ளார்கள். படிப்படியாக ராட்டினத்தில் சிக்கியிருந்த அனைவரும் மீட்கப்பட்டிருக்கிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக நீலாங்கரை காவல் துறையினர் பொழுதுபோக்கு பூங்காவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள்.
பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள விளையாட்டு அம்சங்களுக்கான உரிய ஆவணங்கள், ராட்சத ராட்டினம் பழுதடைந்ததற்கான காரணம் என்ன, ராட்டினத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் சார்பில் விளக்கம் கொடுக்கப்படும் வரை பூங்காவைத் திறக்க தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் சார்பில் அளிக்கப்படும் பதில்களைப் பொறுத்து மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.