ஜாஃபர் சாதிக் 3,500 கிலோ போதைப் பொருளைக் கடத்தியுள்ளார்: போதைப் பொருள் தடுப்புப் பிரிவு

போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை, ஜாஃபர் சாதிக் திரைத் துறை மற்றும் கட்டுமானத் துறையில் முதலீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டதாகத் தகவல்
ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டதாகத் தகவல்@arjaffersadiq

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாஃபர் சாதிக் 3,500 கிலோ போதைப் பொருளைக் கடத்தியுள்ளதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் காவல் துறை சிறப்புப் பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கடந்த பிப்ரவரி 15-ல் கைது செய்யப்பட்டார்கள்.

கடந்த 3 மாதங்களில் ரூ. 2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை வெளிநாடுகளுக்குக் கடத்தியுள்ளதாகவும், இந்தக் கடத்தல்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்டது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக் என்பது தெரியவந்தது. இந்தச் செய்தி வெளியானதும் திமுகவினுடைய சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் பொறுப்பிலிருந்து ஜாஃபர் சாதிக் நீக்கப்பட்டார்.

ஜாஃபர் சாதிக் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தில்லியில் தலைமறைவாக இருந்த அவர் இன்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

ஜாஃபர் சாதிக் கைது குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு துணைத் தலைவர் ஞானேஷ்வர் சிங் கூறியதாவது:

கடந்த பிப்ரவரியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கியப் புள்ளி ஜாஃபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி 15-ல் அவென்டா என்ற பெயரில் செயல்பட்டு வந்த நிறுவனத்தின் கிடங்கில் 50.70 கிலோ சூடோஃபெட்ரைனை கைப்பற்றினோம். அப்போது ஜாஃபர் சாதிக்கின் கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டார்கள். அப்போதிலிருந்து ஜாஃபர் சாதிக் தலைமறைவாக இருந்தார். உலகளவில் அதிக தேவை இருக்கும் மெதம்ஃபெடமைன் பொருளைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பொருள்தான் சூடோஃபெட்ரைன்.

கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஜாஃபர் சாதிக்கைக் கண்டுபிடித்துள்ளது. அவர் தில்லியில் வைத்து இன்று (மார்ச் 9) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நடத்தி வரும் கும்பல் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுக்கு 3,500 கிலோ சூடோபெட்ரைன் கடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்புடைய மொத்த கும்பலையும் பிடிப்பதற்காக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலுள்ள அதிகாரிகளுடன் இணைந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு செயல்பட்டு வருகிறது.

சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் மூலம் கிடைத்த நிறைய பணத்தை திரைத் துறை, கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்துள்ளார். போதைப் பொருள்கள் மூலம் பயனடைபவர்கள் மற்றும் இவரது நிதி ஆதாரங்களைக் கண்டறிவதற்காக போதைப் பொருள் கடத்தலில் இவருடைய தொடர்புகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுத்துள்ளது தொடர்பாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாங்கள் விசாரித்து வருகிறோம்.

சூடோஃபெட்ரைனை சட்டவிரோதமாக வைத்திருப்பதும், விற்பனை செய்வதும் தண்டனைக்குரிய குற்றம். 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்" என்றார்.

தமிழ்த் திரைத் துறை மற்றும் பாலிவுட்டிலிருந்து பல பெயர்களை இவர் வெளியிட்டுள்ளதாகவும், அதுதொடர்பாகவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in