தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 30 மாலை நிலவரப்படி அரசுப் பேருந்துகளில் 3.41 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளைக் காட்டிலும் கூடுதல் பேருந்துகள் சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்பட்டன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அக்டோபர் 28 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகளையும் ஒப்பந்தம் அடிப்படையில் அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன.
பேருந்துகள் சரியான முறையில் எவ்வித சிக்கலுமின்றி இயக்கப்படுகிறதா என்பதை அமைச்சர் சிவசங்கர் அக்டோபர் 30 அன்று மாதவரம், கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து, கிளாம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"தீபாவளியை ஒட்டி சென்னையிலிருந்து பொதுமக்கள் செல்வதற்கும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அவரவர் சொந்த ஊர் செல்வதற்கும் வழக்கமாக இயக்கும் பேருந்துகளைவிட கூடுதல் பேருந்துகளை இயக்க ஆணையிட்டதன் அடிப்படையில் நேற்று முன்தினம் முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில் நேற்று முன்தினம் (அக்டோபர் 28) 1.10 லட்சம் பேர் சென்னையிலிருந்து பயணம் செய்திருந்தார்கள். நேற்று (அக்டோபர் 29) 2.31 லட்சம் பேர் பயணம் செய்திருந்தார்கள். இன்று (அக்டோபர் 30) மாலை நிலவரப்படி 1.31 லட்சம் பேர் பயணம் செய்துள்ளார்கள்.
இதுவரை மொத்தம் 3.41 லட்சம் பேர் பயணம் செய்துள்ளார்கள். இரவு 12 மணி வரை இன்னும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குத் தேவையான அளவுக்குப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தனியார் பேருந்துகள் ஒப்பந்தம் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. கடந்த இரு நாள்களாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் இயக்கப்படுகிறது. இன்றும் இயக்கப்படுகிறது.
எந்தக் குளறுபடிகளுக்கும் இடமில்லாமல் அரசுப் பேருந்து கட்டணத்தில் அரசு நடத்துனரோடுதான் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் என மூன்று பேருந்து முனையங்களிலிருந்தும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன" என்றார் அமைச்சர் சிவசங்கர்.