அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின்

"50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து ஜூலை 1, 2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்."
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின்
1 min read

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு ஜூலை 1, 2024 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் முதல்வர், இதனைக் கனிவுடன் பரிசீலித்து ஜூலை 1, 2024 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

இதனால் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து ஜூலை 1, 2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ. 1,931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் கடந்த 16 அன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியின் உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in