இன்று (செப்.05) தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 3 புதிய சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திறந்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் நங்கிளிகொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி ஆகிய 3 பகுதிகளில் புதிய சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இன்று திறந்துள்ளது. இதைத் தொடர்ந்து 3 சுங்கச்சாவடிகளிலும் வசூலிக்கப்பட உள்ள வாகனங்களுக்கான சுங்கக்கட்டண விவரத்தை வெளியிட்டது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.
இதன்படி ஒரு முறை சென்றுவர நங்கிளிகொண்டானில் ரூ. 60 முதல் ரூ. 400 வரையும், கரியமங்கலத்தில் ரூ, 55 முதல் ரூ. 370 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த 67 சுங்கச்சாவடிகளில் மொத்தம் 62 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.
2008 தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண (நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகளின் அடிப்படையில், இந்த 62 சுங்கச்சாவடிகளில் 34 சுங்கச்சாவடிகளில் கடந்த ஜூன் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மீதம் இருக்கும் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டண உயர்வு அமலானது.