சென்னையில் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு

மெட்ரோ ரயில் பணிகளுக்கும், விபத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
சென்னையில் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு
படம்: https://twitter.com/ANI

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்த விபத்து சுமார் 7.15 மணியளவில் நிகழ்ந்துள்ளது. விபத்து நிகழ்ந்தபோது விடுதிக்குள் 3 பேர் இருந்துள்ளார்கள். இவர்கள் மூவருமே உயிரிழந்துள்ளார்கள். உயிரிழந்தவர்களில் இருவர் மணிப்பூரைச் சேர்ந்த இளைஞர்கள். ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

விபத்து குறித்து கிழக்கு மண்டல இணை ஆணையர் தர்மராஜ் கூறியதாவது:

"மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள். நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். விசாரணையின் அடிப்படையில் காரணமான நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இடிபாடுகள் அகற்றப்பட்டுவிட்டன. உயிரிழந்த அனைவரும் இந்த விடுதியில் பணியாற்றி வந்தவர்கள்" என்றார் அவர்.

கேளிக்கை விடுதியின் முன்பு மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், விபத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இருக்கக்கூடுமா என தொடக்கத்தில் அஞ்சப்பட்டது.

எனினும், மெட்ரோ ரயில் பணிகளுக்கும், விபத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"இந்தத் துரதிருஷ்டவசமான சம்பவத்துக்கும், நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விபத்து நேர்ந்த கட்டடத்திலிருந்து 240 அடி தொலைவில் தான் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி வருகிறார்கள். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் மாநில தீயணைப்புப் படையினருக்குத் தேவையான உதவிகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்கி வருகிறது."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in