தவெக செயற்குழுவில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சமூகநீதியின் பாதையில் பயணிக்கிறோம் என கூறிவிட்டு தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல், ஒன்றிய அரசு மீது பழி போடுவதை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.
தவெக செயற்குழுவில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
1 min read

சென்னையில் இன்று (நவ.3) நடைபெற்ற தவெக செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தவெக செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியது. இந்த செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேறியுள்ளது. கூட்டத்தில் நிறைவேறிய சில தீர்மானங்கள் பின்வருமாறு:

கொள்கைகளையும், கொள்கைத் தலைவர்களை உறுதியாகப் பின்பற்றுவதில்தான் ஒரு இயக்கத்தின் வளர்ச்சியும், வேகமும், விவேகமும் இருக்கிறது. தவெக அதை நன்கு உணர்ந்து கொள்கை தலைவர்கள் வழிநடக்கும் இயக்கமாக செயல்படும் என்பதை வலியுறுத்தி கொள்கைகள், கொள்கைத் தலைவர்களை உறுதியாக பின்பற்றும் தீர்மானம்.

கொள்கை திருவிழா மாநாட்டை வெற்றி பெற வைத்த பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம்.

மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் பற்றிய விளக்கத் தீர்மானம்.

ஒன்றிய பாஜக அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை எதிர்த்து, ஜனநாயகக் கொள்கை தீர்மானம்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு தண்டனை வழங்கப்படும் தற்போதைய சட்டத்தை வலுவாக்கி, குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட நபர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்க சட்ட திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பெண்கள் பாதுகாப்பு கொள்கை தீர்மானம்.

சமூகநீதியின் பாதையில் பயணிக்கிறோம் என கூறிவிட்டு தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல் ஒன்றிய அரசு மீது பழி போடுவதை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். காலதாமதமின்றி தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக நீதிக் கொள்கை தீர்மானம்.

மாநில சுயாட்சியின் அடிப்படையில், மருத்துவம் போன்று கல்வியையும் மாநில பட்டியலுக்கு மாற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி மாநில தன்னாட்சி உரிமைக் கொள்கை தீர்மானம்.

காஞ்சிபுரம் பரந்தூரில் விமான நிலையம் அமைவதால் விவசாய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய நிலங்கள் பாதுகாப்பு கொள்கை தீர்மானம்.

கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து தொடங்கக் கோரும் தீர்மானம்.

ஈழத் தமிழர்களின் உரிமையைப் பாதுகாக்க தீர்மானம்.

மொழிப்போர் தியாகிகள் வாழ்ந்த மண்ணில் எக்காலத்திலும் மும்மொழி கொள்கையை திணிக்கும் முயற்சி நிறைவேறாது. தமிழ் மொழி சார்ந்த விஷயங்களில் தலையிட ஒன்றிய அரசுக்கோ, ஒன்றிய அரசின் பிரதிநிதிகளுக்கோ உரிமையில்லை என்பதை வலியுறுத்தித் தீர்மானம்

மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வலியுறுத்தித் தீர்மானம்.

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடிவிட்டு, அரசின் வருவாய்க்கு மாற்று திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தித் தீர்மானம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in