காவிரியிலிருந்து 2.5 டிஎம்சி நீரைத் திறந்துவிட வேண்டும்: கர்நாடகத்துக்குப் பரிந்துரை

மே மாதம் வரையிலான 6.2 டிஎம்சி நீரையும், ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி நீரையும் உடனடியாக விடுவிக்க கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

தமிழ்நாட்டுக்குக் காவிரியிலிருந்து 2.5 டிஎம்சி நீரைத் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது.

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 96-வது கூட்டம், தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று காணொளி வாயிலாகக் கூடியது. இதில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 21-ல் நடைபெறவுள்ள நிலையில், இன்று ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உறுப்பினர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து அளிக்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

இதன்படி, மே மாதம் வரை தமிழ்நாட்டுக்கு 10 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் விடுவித்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை 3.8 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகம் திறந்துள்ளதாகத் தமிழ்நாட்டின் உறுப்பினர்கள் தரப்பில் ஒழுங்காற்றுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனவே, மீதமுள்ள 6.2 டிஎம்சி நீரையும், ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி நீரையும் உடனடியாக விடுவிக்க கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருந்தபோதிலும், தமிழ்நாட்டுக்குக் காவிரியிலிருந்து 2.5 டிஎம்சி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in