
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியை இன்று (ஜூலை 30) வெளியிட்ட அக்கட்சித் தலைவர் விஜய், 1967 மற்றும் 1977 சட்டப்பேரவைத் தேர்தல்களைப்போல 2026 சட்டப்பேரவைத் தேர்தலும் திருப்புமுனையாக அமையும் என்று கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், `வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியை விஜய் அறிமுகம் செய்தார்.
இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேசியதாவது,
`அனைவருக்கும் வணக்கம். இதற்கு முன்பு நமது தமிழக அரசியலில் நடைபெற்ற இரு மிகப்பெரிய தேர்தல்கள், அதாவது 1967 மற்றும் 1977 ஆகியவற்றைப்போல 2026 தேர்தலும் அமையப் போகிறது.
அதில் நாம் உறுதியாக இருக்கிறோம், ஆரம்பத்தில் இருந்தே நாம் அதை கூறி வருகிறோம். அந்த இரு மாபெரும் தேர்தல்களில் ஏற்கனவே தொடர்ந்து வெற்றிபெற்றுக்கொண்டிருந்தவர்களின் அதிகார பலம், அசுர பலம் போன்றவற்றை எதிர்த்து நின்றுதான் புதிதாக வந்தவர்கள் வெற்றிபெற்றனர்.
எப்படி வெற்றிபெற்றார்கள் என்று பார்க்கும்போது அது ஒரு எளிய விஷயம்தான். ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு என்று அனைத்து மக்களையும் சந்தித்தார்கள். இந்த நேரத்தில் அறிஞர் அண்ணா கூறிய விஷயத்தை நானும் இங்கே மீண்டும் கூற விரும்புகிறேன்.
மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு என்பதை சரியாக செய்தாலே போதும், ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பங்களையும் ஒன்றாக இணைத்து நம்மால் நிச்சயமாக வெற்றியடைய முடியும்.
இதன் பிறகு மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என மக்களோடு மக்களாகத்தான் இருக்கப் போகிறோம். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள். நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்’ என்றார்.