
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள விசாகா பெண்கள் தங்கு விடுதியில் இருந்து இன்று காலை 4 மணியளவில் கரும்புகை வெளியேறியது. இதைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் இரண்டு மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்தத் தீ விபத்தில் பரிமளா என்ற ஆசிரியையும், சரண்யா என்ற பெண்ணும் உயிரிழந்தனர். தீ விபத்தில் காயமடைந்த 4 பெண்கள் எல்லிஸ் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கரும்புகை காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்ட சிலருக்கு அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் கட்டடத்தை லீசுக்கு எடுத்து விடுதியை நடத்தி வந்த இன்பா என்பவரைக் கைது செய்துள்ளனர். விபத்து ஏற்பட்ட கட்டடம் 100 வருடங்கள் பழமையானது என்பதால், கட்டடத்தின் உரிமையாளர் தினகரனுக்கு 2 வருடங்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் விடுதியை நடத்தி வந்த இன்பா கட்டடத்தைக் காலி செய்ய மறுத்துவிட்டதாகவும், அதனால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததாகவும், புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார் கட்டடத்தின் உரிமையாளர் தினகரன். மேலும் விடுதிக்குள் இருந்த பிரிட்ஜ் வெடித்ததே தீ விபத்துக்குக்கான காரணமாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தீ விபத்து நடந்த இடத்துக்குச் சென்று நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், `இந்தக் கட்டடம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி, ஆவணங்களைச் சரி பார்த்துவிட்டு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் உள்ள தங்கும் விடுதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, முறையான பதிவு இல்லாத விடுதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
இதைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சியில் அனுமதியின்றி செயல்படும் விடுதிகள் குறித்து 4 உதவி ஆணையர்கள் தலைமையில் ஆய்வு செய்யப்படும் என்று மதுரை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது