
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் கல்லூரி பேராசிரியர் உள்ளிட்ட 4 நபர்களைக் கைது செய்தது வால்பாறை காவல்துறை.
கடந்த ஆகஸ்ட் 30-ல் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் வால்பாறை அரசுக் கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பொது இடங்கள் மற்றும் கல்லூரியில் மாணவிகளுக்கு ஏற்படும் தொந்தரவுகள் குறித்து அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது வெளியூரில் இருந்து வந்து வால்பாறை கல்லூரி விடுதியில் தங்கிப்படிக்கும் 7 மாணவிகள் கல்லூரியில் தங்களுக்கு ஏற்படும் பாலியல்ரீதியிலான தொல்லைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணியிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து வால்பாறை காவல் நிலையத்தில் புகாரளித்தார் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி.
வால்பாறையில் மகளிர் காவல் நிலையம் இல்லாததால், அருகில் இருக்கும் பொள்ளாச்சி மகளிர் காவல்துறை அதிகாரிகள் வால்பாறைக்குச் சென்று அரசுக் கல்லூரி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து, மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றி வரும் 2 பேராசிரியர்கள், என்.சி.சி பயிற்சியாளர் ஒருவர், ஆய்வுக்கூட உதவியாளர் ஒருவர் என நான்கு நபர்கள் வால்பாறை காவல்நிலைய காவலர்களால் கைது செய்யப்பட்டனர்.