திருச்செந்தூர் கோயில் யானை மிதித்ததில் பாகன் உதயகுமார் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடலை ஒட்டி அமைந்துள்ளது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில். இந்த கோயிலுக்குச் சொந்தமாக 25 வயதில் தெய்வானை என்ற பெயரில் யானை ஒன்று உள்ளது. இந்த யானையின் பராமரிப்புக்காக களிக்காவிளையைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் பாகனாக பணியமர்த்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில், வழக்கம்போல இன்று யானை தெய்வானை அதற்குரிய இடத்தில் கட்டப்பட்டிருந்தது. பிற்பகல் 3.30 மணி அளவில், யானை தெய்வானை பாகன் உதயகுமாரையும், அங்கிருந்த அவரது உறவினர் சிசுபாலனையும் மிதித்தது. இதை அடுத்து இந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சிசுபாலனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரித்தனர். அதேநேரம் படுகாயத்துடன் இருந்த யானைப் பாகன் உதயகுமாருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சில நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளார். அதேநேரம் யானை மிதிப்பதற்கு முன்பு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
கோயில் வளாகத்தில் யானை மிதித்து பாகன் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்ததை அடுத்து கோயில் நடை 45 நிமிடங்கள் சாற்றப்பட்டது. பரிகார பூஜைகள் நடைபெற்ற பிறகே மீண்டும் நடைதிறக்கப்பட்டது. யானை தெய்வானையை பரிசோதித்த வனத்துறையினர் அதற்கு மதம் பிடிக்கவில்லை என தகவல் தெரித்தனர். இதைத் தொடர்ந்து யானைக்கு கால்நடை மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.