
திருச்சியில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படும் நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சமூக நீதி குறித்து கேள்வியெழுப்பி விமர்சித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் பாதாள சாக்கடை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ ரவி (38) மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பகுதியைச் சேர்ந்த பிரபு (32) ஆகியோர் திருவெறும்பூர் கார்மெல் கார்டன் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது விஷவாயு தாக்கியதாகத் தெரிகிறது. இதில் ரவிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளே விழுந்துள்ளார். இவரைக் காப்பாற்ற முயற்சித்த ரவி என்பவரும் மயங்கி உள்ளே விழுந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதுதொடர்பாக திருவெறும்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். மனித கழிவுகளை மனிதர்களே அகற்றியதால் ஏற்பட்ட மரணம் என்று இதுகுறிப்பிடப்படவில்லை.
இச்சம்பவத்துக்கு தமிழ்நாடு அரசைக் கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"திமுக ஆட்சியில் சமூக நீதி எல்லாம் தேர்தல் நேர சாயம் தானா?
தமிழகத்தில் பாதாள சாக்கடைக் கழிவுகளை நீக்கும் தூய்மைப் பணியாளர்கள் விஷவாயு தாக்கி இறப்பது தொடர்கதையான நிலையில், தற்போது மேலும் இருவர் திருவெறும்பூரில் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
சமூக நீதி குறித்து சந்து பொந்துகளில் எல்லாம் வகுப்பெடுக்கும் திமுக அரசுக்குத் தூய்மைப் பணியாளர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க பணமில்லையா? அல்லது மனமில்லையா?
ஒருபுறம் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தி நல்வாழ்வுக்கு வித்திடும் வகையில் நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அரசு நமஸ்தே திட்டத்தை செயல்படுத்தி வருகிறது, மறுபுறம் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசோ போதிய உபகரணங்கள் வழங்காது தூய்மைப் பணியாளர்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. இது தான் தேசிய மாடலுக்கும் திராவிட மாடலுக்கும் வித்தியாசம்!
தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பறித்துவிட்டு, சில லட்சம் ரூபாயை மட்டும் இழப்பீடாகக் கொடுத்து, செய்த தவறைச் சரிசெய்யாது அடுத்த தேர்தலுக்கான விளம்பரத்திற்கு ஆயத்தமாகிவிடும் திமுக அரசு, இனி ஒருநாளும் சமூகநீதி குறித்து வாய்திறக்கவே கூடாது!" என்று பதிவிட்டுள்ளார்.
Nainar Nagenthran | Tamil Nadu BJP | TN BJP | Trichy | Social Justice |