

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது. மறுபுறம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மோன்தா புயலாக வலுப்பெற்றுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து இன்று மோன்தா திவீரப் புயலாக வலுப்பெறும் நிலையில் 18 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று (அக்.27) சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
”தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 480 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. காக்கிநாடாவிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 530 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 560 கிலோ மீட்டர் தொலைவிலும், அந்தமான் தீவுகளில் இருந்து மேற்கே 890 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இந்த மோன்தா புயல் 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இது அக்டோபர் 28 அன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்று, மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளில் மச்சிலிப்பட்டினம் கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் தீவிர புயலாகவே நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்க கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 110 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
அதேபோல் அரபிக்கடல் பகுதியில் அக்டோபர் 26 அன்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளை கடந்து செல்லக்கூடும்.
இதையடுத்து அக்டோபர் 28 அன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிககன மழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. மேலும், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. மேலும், தமிழக கடலோர பகுதிகளில் அக்டோபர் 27 முதல் 29 வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று கூறினார்.
The Regional Meteorological Centre's Southern Zone Head, Amudha, has stated that a heavy rain warning has been issued for 18 districts in Tamil Nadu on October 28 ahead of Montha Cyclone