தேசிய கல்விக் கொள்கையால் ஏற்படும் 12 நடைமுறை சிக்கல்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கையை பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் உயர்கல்வி விகிதத்தையும், கல்வி சாதனைகளையும் அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
2 min read

தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதிய கடிதத்தை தொடர்ந்து, தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை பட்டியலிட்டுள்ளார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.

தமிழக மாணவர்கள், ஆசிரியர்கள் நலனைக் கருத்தில்கொண்டு சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்குச் சேர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், தேசியக் கல்விக் கொள்கையால் ஏற்படும் நன்மைகள் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று (பிப்.21) கடிதம் எழுதினார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது,

`தூண்டில் போட்டுவிட்டு அதில் மீன் சிக்காதா என்று வகையில் இருக்கிறது மத்திய கல்வி அமைச்சரின் கடிதம். தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் 12 சிக்கல்கள் குறித்து நான் பட்டியலிட விரும்புகிறேன்.

முதலாவதாக, பாரம்பரிய மொழி அடையாளத்திற்கான அர்ப்பணிப்பு. 1968-ல் அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இரு மொழிக்கொள்கை தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது. மூன்றாவது மொழியை திணிப்பது இந்த பாரம்பரியத்தை சிதைக்கும்.

இரண்டாவதாக, இரு மொழிக் கொள்கையில் கல்வி வெற்றி. தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கையை பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் உயர்கல்வி விகிதத்தையும், கல்வி சாதனைகளையும் அளித்துள்ளது. இதனால் கடந்த 50 ஆண்டுகளாக சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாவதாக, கல்வியில் மாநில சுயாட்சி. மூன்றாவது மொழியை நிராகரிப்பது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள கூட்டாட்சித் தத்துவத்துடன் ஒத்துப்போகிறது. மூன்றாவது மொழியை திணிப்பது மாநில உரிமையை மீறுகிறது.

நான்காவதாக, மொழி திணிப்பிற்கு எதிர்ப்பு. தமிழ்நாட்டில் ஹிந்தியை திணிப்பதற்கான மறைமுக முயற்சியே மும்மொழிக்கொள்கை. இது தமிழ் அடையாளத்திற்கு எதிரான அத்துமீறல்.

ஐந்தாவதாக, நடைமுறை சவால்கள். மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்தினால், அதற்கு தகுதியான ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட சிக்கல்கள் உள்ளன.

ஆறாவதாக, மாணவர்களின் அறிவாற்றல் மீதான சுமை. ஆரம்ப காலத்தில் குறைவான மொழிகளை கற்பது மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. தமிழ் மற்றும் ஆங்கிலம், உள்ளூர் மற்றும் உலகளாவிய தேவைகளுக்குப் போதுமானது. இதனால் மாணவர்களின் மன அழுத்தம் தவிர்க்கப்படுகிறது.

ஏழாவதாக, தன்னார்வ மொழிக் கற்றலுக்கு மாற்று. ஹிந்தி உள்ளிட்ட எந்தவொரு மொழியையும் தன்னார்வமாகக் கற்பதற்கு எந்த தடையும் தமிழகத்தில் இல்லை. ஆனால் மொழியைத் திணிப்பதால் மாணவர்கள் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டு, இடைநிற்றல் அதிகரிக்கிறது.

எட்டவதாக, பன்முக நாட்டில் சமதூரக் கொள்கை. பன்மொழி சமூகமான இந்தியாவில் அதிகாரபூர்வ மொழி அனைத்து மொழிக்குழுக்களுக்கும் சம தூரத்தில் இருக்கவேண்டும் என்று வாதிட்டார். ஆங்கிலம் இந்தப் பணியை திறம்பட செய்கிறது.

ஒன்பதாவதாக, மத்திய முன்னுதாரண ஆதரவு. மத்திய அதிகாரபூர்வ மொழிகள் சட்டம் 1963-ல் தமிழ்நாடு விலக்கு பெற்றுள்ளது. இதை என்றைக்கும் மீறக்கூடாது.

பத்தாவதாக, அரசியல் ஒருமித்த ஆதரவு. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் இரு மொழிக் கொள்கையை ஆதரிக்கின்றன.

பதினோராவதாக, பாதகமின்மையின் சான்று. மூன்றாவது மொழி இல்லாதது வாய்ப்புகளை கட்டுப்படுத்துவதாக விமர்சிக்கப்பட்டாலும், தமிழக மாணவர்கள், தொழில்துறையினர் தேசிய மற்றும் உலகளவில் சிறப்பாக செயல்படுகின்றார்கள்.

நிறைவாக, கூட்டாட்சி ஒத்துழைப்பு வேண்டுகோள். நிதி அழுத்தம் அல்லது கொள்கை திணிப்பிற்கு பதிலாக கூட்டாட்சி ஒத்துழைப்பையே தமிழகம் விரும்புகிறது’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in