விக்கிரவாண்டி: சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

விக்கிரவாண்டி: சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே 4 பேருக்கு ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு இன்று காலை முதல் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, கடந்த 8-ம் தேதி முதல் இன்று இரவு வரை டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளான ஜூலை 13-ம் தேதியும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டியில் மதுபானக் கடைகள் இல்லாததால், புதுச்சேரியிலிருந்து சாராயம் வாங்கி வந்து குடித்ததாகத் தெரிகிறது. விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட பூரிகுடிசை கிராமத்தில் சக்திவேல் என்பவர் புதுச்சேரியிலிருந்து வாங்கி வரப்பட்ட சாராயத்தை குடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. நண்பர்களுடன் சேர்ந்து குடித்ததில் முதலில் இவருக்கு நேற்று காலை உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து 6 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். பிரபு என்பவர் இந்த சாராயத்தை வாங்கி வந்துள்ளார்.

சக்திவேல் என்பவருக்குப் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, சாராயத்தை வாங்கி வந்த பிரபு என்பவர் கூறிய தகவலின் அடிப்படையில், இவரிடம் சாராயம் வாங்கியவர்கள் காவல் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இதன்படி, புதுச்சேரியிலிருந்து வாங்கி வரப்பட்ட சாராயத்தைக் குடித்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மற்றவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in