
ஏழைகளின் மருத்துவர் என்றும், 10 ரூபாய் மருத்துவர் என்றும் பலராலும் அழைக்கப்பட்ட பட்டுக்கோட்டையை சேர்ந்த மருத்துவர் ரத்தினம் பிள்ளை வயது மூப்பால் இன்று (ஜூன் 7) காலமானார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரான ரத்தினம் பிள்ளையின் `டி.ஏ.கே. மருத்துவமனை’ என்ற பெயரிலான கிளினிக், பட்டுக்கோட்டை பெரியகடைத்தெருவில் உள்ளது.
சுமார் 65 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவம் பார்த்து வந்த ரத்தினம் பிள்ளை, தன்னிடம் சிகிச்சைக்கு வந்தவர்களிடம் அவர் மருத்துவம் பார்த்த கடைசி காலகட்டம் வரையில் ரூ. 10 மட்டுமே சிகிச்சை கட்டணமாக பெற்று வந்துள்ளார். இதன் காரணமாகவே 10 ரூபாய் டாக்டர் என்று இவர் அறியப்பட்டிருந்தார்.
மேலும், எப்பேர்ப்பட்ட சிக்கலான சூழலாக இருந்தாலும் அறுவை சிகிச்சை செய்யாமல் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் பார்த்து, அப்பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். இவர் இதுவரையில் சுமார் 65 ஆயிரம் பிரசவங்களை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
2020 கோவிட் பெருந்தோற்று லாக்டௌன் நேரத்தின்போது தனக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் கடைகள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு போதிய வருமானம் இல்லாததால், மூன்று மாதங்களுக்கு வாடகை வசூலிக்காமல் பெருந்தன்மையாக நடந்துகொண்டார்.
இந்நிலையில், வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று (ஜூன் 7) காலை ரத்தினம்பிள்ளை உயிரிழந்துள்ளார். அவரது இறுதி ஊர்வலம் நாளை (ஜூன் 8) காலை 11 மணிக்கு பட்டுக்கோட்டை சீனிவாசபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.