பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி: அரசுப் பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா

"மொத்தம் 1,761 பள்ளிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் இவ்வாண்டில் 100 சதவீதத் தேர்ச்சிகள் பெற்றுள்ளன. பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் இது ஒரு மகத்தான சாதனையாகும்."
பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி: அரசுப் பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா

10, 12-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தமிழில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்புடைய செய்திக் குறிப்பு:

"அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல! அவை பெருமையின் அடையாளம் என்பதைத் தொடர்ந்து பறைசாற்றும் விதமாக இந்தக் கல்வியாண்டின் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் அமைந்துள்ளன.

தமிழ்நாடு முழுவதிலும், இந்த ஆண்டு மார்ச்-ஏப்ரலில் நடைபெற்ற, மேல்நிலைப் பள்ளிகளுக்கான அரசுப் பொதுத் தேர்வுகளில் 12-ம் வகுப்பில் 94.56 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுப் புதிய சாதனை படைத்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் மட்டும் 91.02 சதவீதம் மாணவ மாணவியர் சேர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள 397 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இந்த ஆண்டில் 100 சதவீத தேர்ச்சி விழுக்காட்டை எய்தி மாபெரும் சாதனைப் படைத்துள்ளன. மேலும் தமிழ்ப் பாடத்தில் மட்டும் 35 மாணவ மாணவியர் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோல உயர்நிலைப் பள்ளிகளுக்கான 10-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் மாநிலம் முழுவதும் 91.55 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளனர். இதில், அரசுப் பள்ளிகளில் மட்டும் 87.90 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள 1,364 அரசு உயர்நிலைப் பள்ளிகள் இந்த ஆண்டில் 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற்று சிறந்துள்ளன. தமிழ்ப் பாடத்தில் மட்டும் 8 மாணவ மாணவியர் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1,364 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 397 அரசு மேல்நிலைப் பள்ளிகளும் என மொத்தம் 1,761 பள்ளிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் இவ்வாண்டில் 100 சதவீதத் தேர்ச்சிகள் பெற்றுள்ளன. பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் இது ஒரு மகத்தான சாதனையாகும்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, இந்த ஆண்டின் அரசுப் பொதுத்தேர்வுகளில் 100 சதவீதத் தேர்ச்சிகள் கண்டு சாதனை படைத்துள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும், தமிழ்ப் பாடத்தில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவ மாணவியர் அனைவரையும் சென்னைக்கு அழைத்துப் பாராட்டும் வகையில் சீர்மிகு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் விரைவில் நடத்தப்படவுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in