ரஜினி குறித்து தான் பேசியக் கருத்தை பகைச்சுவையாகப் பயன்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக அமைச்சர் எ.வ. வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 24 அன்று நடைபெற்றது.
இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முதல் பிரதியை ரஜினி பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் பேசிய ரஜினி, “பள்ளி ஆசிரியர் வரும்போது புதிய மாணவர்கள் பிரச்னை இல்லை. பழைய மாணவர்களைச் சமாளிப்பது சாதாரணமான காரியம் அல்ல. இங்கு நிறைய பழைய மாணவர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் எல்லாம் தேர்ச்சிப் பெறாமல் அங்கிருப்பவர்கள் அல்ல, ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பை விட்டுச் செல்லாதவர்கள்.
கலைஞரை சிறிய வயதிலிருந்து பார்த்து வளர்ந்தவர்களைச் சமாளிப்பது சாதாரணமான காரியம் அல்ல. துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். இவர் கலைஞர் கண்களில் விரலைவிட்டு ஆட்டியவர்.” என்றார்.
இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், “மூத்த நடிகர்களுக்கு வயதாகிவிட்டது, பல் விழுந்துவிட்டது, தாடி வளர்ந்துவிட்டது. கடைசி நிலையிலும் நடித்து வருவதால், இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது” என்று பேசியிருந்தார்.
இதன் பிறகு இவர்கள் இருவரும் பேசியது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, “துரைமுருகன் என்னுடைய நீண்டகால நண்பர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. அவருடனான நட்பு எப்போதும் தொடரும்” என்றார்.
இதைத் தொடர்ந்து துரைமுருகனும், “எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாகப் பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும்போல் நண்பர்களாகவே இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.