ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ல் சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் திருவேங்கடம் என்பவர் ஜூலை 14-ல் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் கடந்தாண்டு படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி செம்பியம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். ஆந்திரத்தில் தலைமறைவாக இருந்ததை அறிந்து, அங்கு வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
காவல் துறை விசாரணையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனுடன் மோனிஷா செல்போனில் பேசியது தெரியவந்துள்ளது.
எனவே, காவல் துறையினரால் தேடப்பட்டு வரும் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்தாரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மோனிஷாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் மொட்டை கிருஷ்ணனுக்கு நெல்சனின் மனைவி வங்கி கணக்கில் இருந்து ரூ. 75 லட்சம் கொடுத்ததாக தகவல் வெளியானது. இது குறித்து மோனிஷா சார்பில் அவரது வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
“மோனிஷா மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ளன. வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் தொடர்பாக காவல் துறை கேட்ட விளக்கத்தை மோனிஷா அளித்துள்ளார். இந்த வழக்கில் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் தந்ததாக வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை. மோனிஷா, இயக்குநர் நெல்சனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களை நீக்கவேண்டும், இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.