தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடல் இன்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் விஜய்க்கு அவரது தாயார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார் விஜய்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு களமிறங்கிய விஜய் நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்கிற நிலைப்பாட்டை எடுத்தார்.
இவற்றைத் தொடர்ந்து தற்போது 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகி வரும் அவர், கட்சிக் கொடியை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சென்னை பனையூரிலுள்ள தலைமை நிலையச் அலுவலகத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றி வைத்தார் விஜய். இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரபூர்வப் பாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விஜய்யின் தாய் ஷோபா விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
“நாட்டுக்கு ராஜா என்றாலும், தாய்க்கு பிள்ளை தானே.
சினிமாவில் உயர்ந்த அந்தஸ்த்தில் ஆட்சிப் புரிகிறார் என்பதே அளவிடமுடியாத ஆனந்தம் எனக்கு.
விஜய் எதையும் அமைதியாக உள்வாங்கி, ஆர்ப்பரிப்பு இல்லாமல் ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த தெரிந்த பிள்ளை.
அமைதியில் அவர் ஒரு கடல்.
பெயரிலேயே வெற்றி கொண்ட விஜய், கட்சியின் பெயரிலும் வெற்றியைக் கொண்டுள்ளார்.
திரையில் உன் முகம் பார்த்து உன்னை உயர்த்திய மக்களுக்கு தரையில் நடந்து வந்து ஏதேனும் செய்.
மக்களின் குறைகளை காது கொடுத்து கேள்.
உன் அரசியல் பயணம் பணம் தாண்டிய லட்சியம் என்று ஊரே பாராட்டும் போது உள்ளம் நெகிழ்கிறது.
தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று. பெண்ணியம் காப்பாற்று. புரட்சிகர திட்டங்கள் தீட்டு.
வானில் பறக்கும் உன் அரசியல் கொடி. உன் அரசியல் வெற்றிக்கு இதுவே முதல் படி.
உன் நண்பா நண்பிகளின் நம்பிக்கை நீ. உன் கட்சியின் முதல் தொண்டன் நீ. வாகை சூடு விஜய்”