
எந்த ஒரு புதிய வேலையைத் தொடங்கும் முன்பும் ஹிந்து மக்கள் விநாயகரை வழிப்படுவது வாடிக்கை. அறிவு, ஞானம், செல்வம், செழிப்பு ஆகியவற்றை மனிதன் அடைய விநாயகரின் ஆசி முக்கியம் என பக்தர்கள் எண்ணுவார்கள்.
ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
இதன்படி நாளை, அதாவது ஆகஸ்ட் 26 அன்று பிற்பகல் 02.22 மணிக்கு வளர்பிறை சதுர்த்தி திதி தொடங்குகிறது. நாளை மறுநாள், அதாவது ஆகஸ்ட் 27 பிற்பகல் 3.52 மணிக்கு சதுர்த்தி திதி நிறைவடைகிறது. இதனால் ஆகஸ்ட் 27 அன்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடலாம்.
அதேநேரம், விநாயகர் சதுர்த்திக்கு ஒரு நாளுக்கு முன்னதாக, அதாவது ஆகஸ்ட் 26 அன்று விநாயகர் சிலை வாங்க உகந்த நாளாக கூறப்படுகிறது. குறிப்பாக, மாலை 4.50 மணி முதல் 5.50 மணி வரை அல்லது மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை விநாயகர் சிலை வாங்கினால் நல்லது.
ஆகஸ்ட் 27 அன்று காலை 6 மணி முதல் 7.20 மணி வரை விநாயகரை வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.
ஒரு வேளை ஆகஸ்ட் 26 அன்று விநாயகர் சிலையை வாங்க முடியாத சூழல் நேர்ந்தால், ஆகஸ்ட் 27 அன்று காலை 9.10 மணி தொடங்கி 10.20 மணிக்குள் விநாயகர் சிலையை வாங்கி வந்து வழிபாட்டில் ஈடுபடலாம்.
சுண்டல், கொழுக்கட்டை ஆகியவற்றுடன் சாதம், சாம்பார், பொரியல் ஆகியவற்றையுடன் இலையில் படைத்து விநாயகரை வழிபட விரும்பும் அன்பர்கள் ஆகஸ்ட் 27 நண்பகல் 1.25 மணி முதல் 2 மணி வரை வழிபடலாம்.