

கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல காலம் மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக திறக்கப்பட்டதை அடுத்து காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாடு முழுவதிலுமிருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக கார்த்திகை மாதப் பிறப்பிலிருந்து விரதம் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவதுண்டு. அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை மாத மண்டல காலம் மற்றும் மகர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நேற்று (நவ. 16) மாலை திறக்கப்பட்டது.
நவம்பர் 16 (கார்த்திகை 1) முதல் டிசம்பர் 27 வரை தொடர்ந்து 41 நாள்களுக்கு மண்டல பூஜைகள் நடைபெறவுள்ளன. அதனையொட்டி நேற்று மாலை சபரிமலை கோயில் நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதரி திறந்துவைத்து, 18 படிகளின் வழியாக ஏறிய மேல்சாந்தி, ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்தார். அப்போது கோயிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரணகோஷம் எழுப்பி வழிபட்டனர்.
அதைத் தொடர்ந்து புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதரி, இன்று அதிகாலை 3 மணி அளவில் நடையைத் திறந்து இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைகளைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து நெய்யபிஷேகம் தொடங்கப்பட்ட நிலையில் அதிகாலை முதலே பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலையில் இந்த ஒரு மண்டல காலத்திற்கும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 11:30 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மதியம் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 70,000 பக்தர்கள், நேரடி முன்பதிவு மூலம் 20,000 பக்தர்கள் தினந்தோறும் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களின் வருகை அதிகம் இருக்கும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Devotees gather in large numbers at the Sabarimala temple, as it opens for the annual 'Mandala-Makaravilakku' pilgrimage, in Pathanamthitta on Sunday.