மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தைக் காண இந்து சமய அறநிலையத்துறையின் hrce.tn.gov.in இணையதளத்தில் கட்டண முன்பதிவு செய்யலாம்.
Published on

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஏப்.29) தொடங்கியுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும் என்றாலும், சித்திரை திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்த திருவிழாவை ஒட்டி மதுரை மாநகரம் விழாக்கோலம் காணும். அந்த வகையில் நடப்பாண்டின் சித்திரைத் திருவிழா இன்று (ஏப்.29) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். இன்று தொடங்கி காலை, மாலை என இரு வேளையும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் இருவரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவார்கள்.

வரும் மே 6-ல் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இரவு 7.35 மணி முதல் 7.59 மணி வரை நடைபெற்றவுள்ளது. அதன்பிறகு மே 7-ல் திக்விஜயத்தைத் தொடர்ந்து, மே 8-ம் தேதி காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள்ளாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

மே 9-ல் மாசி வீதிகளில் தேரோட்டமும், அதன்பிறகு மே 10-ல் நடைபெறும் தீர்த்தவாரி உற்சவத்துடன் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நிகழ்வுகள் நிறைவுபெறும். பிறகு மே 11-ல் கள்ளழகர் எதிர்சேவையும், மே 12-ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளன.

மே 8-ல் நடைபெறும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தைக் காணும் வகையில் ரூ. 200 மற்றும் ரூ. 500 கட்டண சீட்டுகளைப் பெற, இந்து சமய அறநிலையத்துறையின் hrce.tn.gov.in இணையதளத்தில், இன்று (ஏப்.29) தொடங்கி மே 2-ம் தேதி இரவு 9 மணி வரை முன்பதிவு செய்யலாம்.

logo
Kizhakku News
kizhakkunews.in