சபரிமலையில் ஏற்றப்பட்டது மகரஜோதி: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஜன.20 வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.
சபரிமலையில் ஏற்றப்பட்டது மகரஜோதி: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
1 min read

சபரிமலை பொன்னம்பல மேட்டில் இன்று (ஜன.14) ஏற்றப்பட்ட மகரஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கடந்த நவம்பர் 16-ல் நடப்பாண்டின் மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடைதிறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 42-ம் நாளான டிச.27-ல் மண்டல பூஜை வழிபாடு நடைபெற்றது. அன்று இரவே கோயில் நடைசாத்தப்பட்டது.

இதனை அடுத்து, மகரவிளக்குப் பூஜைக்காகக் கடந்த டிச.30-ல் மீண்டும் நடைதிறக்கப்பட்டது. இதற்கிடையே, இன்று (ஜன.14) மாலை சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி ஏற்றப்படவிருந்ததால் அதைக் காணப் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்.

இதை ஒட்டி, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தின் திருமுற்றம், பாண்டித்தாவளம், கொப்பரைக்களம், மாளிகைபுரம், அப்பாச்சிமேடு, அன்னதான மண்டபம் உள்ளிட்ட 10 இடங்களில் மகரஜோதியைக் காணும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

மாலை 5 மணிக்குக் கோயில் நடைதிறக்கப்பட்டு, பந்தள மன்னர் வழங்கிய திருவாபரண அலங்காரத்தில் காட்சியளித்தார் ஐயப்ப சுவாமி. இதனைத் தொடர்ந்து, சரியாக மாலை 6.45 மணி அளவில் சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி ஏற்பட்டது.

வரும் ஜன.20 வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். இதனை அடுத்து, 21-ம் தேதி பந்தள அரச குடும்பத்தினரின் சுவாமி தரிசனத்துக்குப் பிறகு, சபரிமலை கோயில் நடைசாத்தப்படும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in