

சபரிமலை ஐயப்பன் கோயிலில், நேரடி முன்பதிவு மூலம் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை 5,000 குறைத்துக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கார்த்திகை மாத மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த 16 அன்று திறக்கப்பட்டது. அன்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதில் வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் 70,000 பேரும் நேரடி முன்பதிவு மூலம் 20,000 பேரும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
நாள் ஒன்றுக்கு 90,000 பக்தர்களை மட்டுமே அனுமதிக்கத் திட்டமிடப்பட்ட நிலையில் லட்சக் கணக்கானோர் திரண்டனர். நடை திறந்த நாளில் இருந்து இதுவரை சபரிமலையில் 3 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் சபரிமலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, கேரள உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி. ஜெயக்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது நேரடி முன்பதிவு மூலம் அதிகளவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதுதான் கூட்ட நெரிசலுக்குக் காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து, சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தைக் கண்காணிக்க நிபுணர்கள் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று தேவசம்போர்டுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், எருமேலி பெருவழிப்பாதை, சத்திரம் புல்லுமேடு ஆகிய பரம்பரிய காட்டுவழிப் பாதை வழியாக தினமும் அனுமதிக்கப்படும் நேரடி முன்பதிவு செய்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையை 20,000-ல் இருந்து 5,000 ஆக குறைக்க வேண்டும். எருமேலி, நிலக்கல், பம்பா, வண்டிப்பெரியார், செங்கனூர் ரயில் நிலையம் ஆகிய பகுதியில் நடைபெறும் நேரடி முன்பதிவுகள் இந்த எண்ணிக்கையை மீறக்கூடாது. வார இறுதி நாள்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்த வேண்டும் என்றும், வரும் நவம்பர் 24 திங்கட்கிழமை முதல் இந்த உத்தரவை அமல்படுத்தப்பட வேண்டும் என்று ஆணையிட்டனர்.
இதன்மூலம் இனி நாளொன்றுக்குச் சபரிமலையில் 75,000 பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
The Kerala High Court on November 19, Wednesday ordered the Travancore Devaswom Board to limit daily spot-booking for Sabarimala pilgrims to 5,000, down from about 20,000, citing severe overcrowding and major crowd-management failures.