
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ளது அருள்மிகு ஆண்டாள் சமேத ரெங்கமன்னார் திருக்கோயில். இது நாச்சியார் திருக்கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தத் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், இந்த கோயிலுக்குள் அமைந்திருக்கும் நந்தவனத்தில் உள்ள துளசிச் செடியின் கீழ் அவதரித்தாக ஐதீகம் உள்ளது. இங்கு உள்ள பெருமாள், ரெங்கமன்னார் எனவும் வடபத்திரசாயீ பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார்.
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை வடபத்ரசாயீ பெருமாளுக்கு சாற்றும் வைபவம் தினமும் அங்கு நடந்துவருகிறது. இதனால் ஆண்டாளுக்கு `சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்’ என்ற பெயரும் வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டாள் கோயிலில் நேற்று வழிபாடு மேற்கொள்ளச் சென்றார் இசையமைப்பாளர் இளையராஜா.
அப்போது, கருவறைக்கு முன்பு அமைந்திருந்த அர்த்த மண்டபத்திற்குள் நுழைய முயன்ற இளையராஜாவை அங்கிருந்த ஜீயரும், பட்டர்களும் அனுமதிக்க மறுத்தது, அர்த்த மண்டபத்தின் வெளியே நின்று வழிபாடு மேற்கொள்ளச் செய்ததாக காணொளி வெளியானது.
இந்த விவகாரம் தொடர்பாக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப. ஜெயசீலனுக்கு, தமிழக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (மதுரை) க. செல்லத்துரை அனுப்பியுள்ள கடிதத்தில்,
`இத்திருக்கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார் மூலவர் கருவறையிலும், அதற்கு அடுத்து உள்ள அர்த்த மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் உற்சவரும் எழுந்தருளியுள்ளனர். எனவே இந்த திருக்கோயில் மரபுப்படியும், பழக்க வழக்கப்படியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோயில் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கம் இல்லை என செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
டிச.15 அன்று இசையமைப்பாளர் இளையராஜா, சின்ன ராமானுஜ ஜீயர் உடன் வந்தபோது அவருடன் இணைந்து அர்த்த மண்டப வாசல் படி ஏறினார். அப்போது உடனிருந்த ஜீயர் மற்றும் திருக்கோயில் மணியம் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சாமி தரிசனம் செய்யலாம் எனக் கூறினர். அவரும் அதை ஒப்புக்கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார்’ என்றார்.
வைணவ கோயில்களின் அர்ச்சகர்கள் பட்டர்கள் என அழைக்கப்படுகிறார்கள். அதேநேரம் வைணவ மடாதிபதிகளாக ஜீயர்கள் அறியப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள சில பெருமாள் கோயில்கள் வைணவ ஜீயர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் கோயில்களை நிர்வகிக்காமல், வைணவ மடங்களை மட்டுமே நிர்வகிக்கும் ஜீயர்களும் உண்டு.
தமிழகத்தின் சில முக்கியமான பெருமாள் கோயில்களான மதுரை கள்ளழகர் கோயில், திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயில் ஆகியவை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த இரு கோயில்களிலும் கோயில் ஜீயர் என பிரத்யேகமான பதவி உள்ளது.
வைணவ மடாதிபதிகளாக ஜீயர்கள் இருந்தாலும் அவர்கள் நிர்வகிக்கும் சம்மந்தப்பட்ட பெருமாள் கோயில்களின் கருவறைகளுக்குள் நுழைய, அந்த ஜீயர்களுக்கு அனுமதி கிடையாது. மாறாக கருவறைக்குள் நுழைய, அங்குள்ள மூலவருக்கு பூஜை மேற்கொள்ளும் பட்டர்களுக்கு மட்டுமே அனுமதியும், உரிமையும் உள்ளது.
அதேநேரம் அந்தப் பெருமாள் கோயில்களில் ஜீயர்களுக்கு `முதல் பக்தர்’ என்ற அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். இதன்படி, கருவறைக்கு முன்பு அமைந்துள்ள அர்த்த மண்டபத்தில் இருந்தபடி ஜீயர் சுவாமி தரிசனம் மேற்கொள்ளலாம். அப்போது முன்னுரிமை அடிப்படையில் ஜீயர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டதும், அர்த்த மண்டபத்திற்கு வெளியே இருந்தபடி பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்ளலாம்.
ஜீயர்கள் இல்லாத பெருமாள் கோயில்களில், கருவறைக்குள் பட்டர்களும், அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் அர்த்த மண்டபத்தில் பக்தர்களும் அனுமதிப்படுவார்கள். வைணவ மற்றும் சைவ ஆகமங்களைப் பின்பற்றி அமைந்துள்ள கோயில்களின் கருவறைக்குள் நுழைய மூலவருக்கு பூஜை மேற்கொள்ளும் சம்மந்தப்பட்ட பட்டர்கள்/அர்ச்சகர்கள் தவிர, வேறு யாருக்கும் (ஜீயர்கள், ஆதீனங்கள், பக்தர்கள்) அனுமதி கிடையாது.
இந்தக் காரணங்களின் அடிப்படையில், ஆண்டாள் கோயில் கருவறைக்கு முன்பு அமைந்துள்ள அர்த்த மண்பத்திற்குள் நுழைய இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இது தொடர்பாக இளையராஜா அளித்த விளக்கம் பின்வருமாறு,
`என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்' என்றார்.