
கோவை மாவட்டம் மருதமலையில் 160 அடி உயரத்தில் முருகனுக்கு சிலை அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்துள்ளார்.
கோவை மாவட்டம் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், அறநிலையத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன் ஆகியோருடன் நேற்று (ஜன.28) ஆய்வு செய்தார் அமைச்சர் பி.கே. சேகர்பாபு.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சேகர்பாபு, `மருதமலையில் 160 அடி உயரத்தில் கல்லால் ஆன முருகன் சிலை அமைக்கப்படும், இது தொடர்பாக நிபுணர்கள் குழு ஆய்வு செய்யவுள்ளது. நிபுணர்கள் குழுவின் அறிக்கை வரப்பெற்ற பிறகு, அதை முதல்வரிடம் எடுத்துச் செல்வோம். அவரது அனுமதி பெற்று, பணிகள் தொடங்கப்படும்’ என்றார்.
மேலும் பேசிய சேகர்பாபு, `ரூ. 862 கோடி மதிப்பீட்டில் 7 முருகன் கோயில்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. திருச்செந்தூர், பழனி, மருதமலை, சிறுவாபுரி, வயலூர் மற்றும் காந்தல் முருகன் கோயில்களில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்றார்.
அத்துடன், `மருதமலை கோயிலில் முதற்கட்டமாக ரூ. 6.5 கோடி மதிப்பிலான பணிகள் நிறைவு பெற்றபிறகு, ஏப்ரல் 4-ல் கும்பாபிஷேகம் நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ரூ. 11 கோடியில் திட்டப்பணிகளும், மூன்றாம் கட்டமாக ரூ. 23 கோடியில் பெருந்திட்ட வளாகப் பணிகளும் மருதமலையில் மேற்கொள்ளப்பட உள்ளன’ எனவும் அவர் தகவல் தெரிவித்தார்.