
டொராண்டோ (கனடா): உடல் பருமன் காரணமாகக் கர்ப்பத்தின் முழுமையான காலத்தை நெருங்கும்போது குழந்தை இறந்து பிறக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது என்கிற ஆய்வை கனடாவின் மருத்துவச் சங்க இதழ் (CMAJ) வெளியிட்டுள்ளது. கனடாவில், கர்ப்பக் காலத்தில் பிரசவத்தின் ஒட்டுமொத்த ஆபத்து சுமார் 0.4% ஆகும்.
டல்ஹெளசி பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரும், மகப்பேறு மருத்துவருமான நைலா ராம்ஜி இதுபற்றி, "உடல் பருமன் உள்ள கர்ப்பிணிகளுக்குப் பிரசவ அபாயத்தைக் குறைக்க முன்கூட்டியே பிரசவம் செய்வது உதவும்” என்று கூறியுள்ளார்.
உடல் பருமனுக்கும் பிரசவ அபாயத்துக்கும் இடையிலான தொடர்பு நன்கு அறியப்பட்டிருந்தாலும், கருவின் ஆயுட்காலத்தை முன்வைத்து உடல் பருமன் மற்றும் இறந்து பிறக்கும் குழந்தை குறித்த ஆராய்ச்சிகள் அவ்வளவாக இல்லை. இந்த இடைவெளியை நிவர்த்தி செய்ய நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் கனடாவின் ஒண்டாரியோவில் 20 வார கர்ப்பக் காலத்துக்குப் பிறகு பிறந்த 6.81 லட்சம் குழந்தைகளில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் குழந்தைகள் இறந்து பிறந்துள்ளன. நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிற பிரசவ ஆபத்து காரணிகளைத் தவிர்த்துப் பார்த்தால் சராசரி உடல் பருமன் உள்ளவர்களை (பி.எம்.ஐ. 18.5-24.9 kg/m2) விடவும், உடல் பருமன் வகை 1 (பி.எம்.ஐ. 30-34.9 kg/m2) உள்ளவர்களில் கருவின் ஆயுட்காலம் 39 வாரங்கள் இருந்தால் குழந்தை இறந்து பிறக்கும் அபாயம் இரு மடங்காக உள்ளது. கருவின் ஆயுட்காலம் 40 வாரங்களுக்கும் அதிகமாக இருந்தால் அபாயம் நான்கு மடங்காக அதிகரிக்கிறதாம்.
"குழந்தை இறந்து பிறக்கும் அபாயத்தை அதிகரிக்கும் பிற மருத்துவக் காரணிகளுக்கு, 38 அல்லது 39 வாரங்களில் பிரசவத்தைப் பரிந்துரைக்கும் வழிகாட்டுதல்கள் உள்ளன. சுவாரசியமாக, அதுபோன்ற ஆபத்தான காரணிகள், உடல் பருமனுடன் தொடர்புடைய அபாயங்களை விட குறைவாக உள்ளன” என்கிறார் மருத்துவர் டாக்டர் நைலா ராம்ஜி.
உடல் பருமன் வகை 1, 2 உள்ள கர்ப்பிணிகளுக்குக் குழந்தை இறந்து பிறக்கும் அபாயம், பிரசவத்துக்கு முன்பு அதிகமாக உள்ளதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்புகள் - ஆபத்தில் உள்ள இவ்வகைக் கர்ப்பிணிகள் மீது கூடுதல் கவனிப்பை உருவாக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
"உடல் பருமன் உள்ள கர்ப்பிணிகள், குறிப்பாகக் கூடுதல் ஆபத்துக் காரணிகள் உள்ளவர்கள் சரியான நேரத்தில் மருத்துவம் மற்றும் அதிகக் கண்காணிப்பின் மூலம் பயனடையலாம், மேலும் கூடுதல் ஆபத்துக் காரணிகள் இருப்பது, முன்கூட்டிய பிரசவத்திற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடும்" என்கிறார் நைலா ராம்ஜி.
உணவியல் நிபுணரும் மருத்துவமான காஹில் இதுபற்றிக் கூறியதாவது: "உடல் பருமன் தொடர்பான எதிர்மறையான கருத்துகள், நம்பிக்கைகள் மற்றும் சமூகத்தில் நிலவும் மதிப்பீடுகள் ஆகியவை உடல் மற்றும் மன ரீதியான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. உடல் பருமன் கொண்ட கர்ப்பிணிகள் மரியாதைக்குரிய கவனிப்பைப் பெற வேண்டும். இதன்மூலம் மருத்துவர்களும் கர்ப்பிணிகளும் நல்ல முடிவுகளைப் பெறுவதற்கான வழிவகைகள் உருவாக வேண்டும்” என்றார்.