
கல்லூரி மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய கல்விக் கடன் திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (நவ.6) ஒப்புதல் அளித்துள்ளது.
தலைநகர் தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, `வித்யா லட்சுமி திட்டம்’ என்ற பெயரில் கல்லூரி மாணவர்களுக்கான புதிய கல்விக் கடன் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு இந்த கல்விக் கடன் திட்டம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேசியவை பின்வருமாறு,
`உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் அனுமதியைப் பெறும் எந்த ஒரு மாணவரும் வித்யா லட்சுமி திட்டத்தின் கீழ் கல்விக் கடன் பெறலாம். அத்தகைய கல்விக் கடன்கள் உத்தரவாதங்கள் இல்லாமல் மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக் கடன்கள் வழங்கப்படும்.
ஆண்டுக்கு ரூ. 8 லட்சத்துக்கு மிகாமல் குடும்ப வருமானம் இருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், ரூ. 10 லட்சம் வரை கல்விக்கடன் பெறும்போது, வட்டியில் 3 சதவீத மானியம் அவர்களுக்குக் கிடைக்கும். மேலும், குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் மாணவர்களுக்கு முழுமையாக வட்டி மானியம் கிடைக்கும்.
நிதிப் பிரச்னையினால் இனி எந்த ஒரு தகுதி வாய்ந்த மாணவருக்கும் உயர்கல்வி மறுக்கப்படாது. இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களின் கல்விக் கடன் விண்ணப்பத்தை பரிசீலிக்கவும், கடன் தொகையை விநியோகிக்கவும் பிரத்யேகமான வித்யா லட்சுமி இணையதளம் தொடங்கப்படும்’ என்றார்.