புதிய தேர்தல் ஆணையர்கள் யார்?: அதீர் ரஞ்சன் சௌதரி தகவல்

"தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான குழுவில் அரசின் குரல் பெரும்பான்மையாக உள்ளது."
அதீர் ரஞ்சன் சௌதரி (கோப்புப்படம்)
அதீர் ரஞ்சன் சௌதரி (கோப்புப்படம்)ANI
1 min read

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே தற்போது பதவியில் உள்ளார். தேர்தல் ஆணையர் அருண் கோயல் கடந்த வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். இவருடைய பதவிக்காலம் 2027 வரை உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த சனிக்கிழமை இவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே கடந்த பிப்ரவரியில் ஓய்வு பெற்றார். இரு தேர்தல் ஆணையர் பதவிகள் தற்போது காலியாக உள்ளன.

தேர்தல் ஆணையர்களை நியமிக்க சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையில் உள்துறைச் செயலர் மற்றும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறைச் செயலர் அடங்கிய குழு இந்தப் பதவிகளுக்கு தலா 5 பெயர்களைப் பரிந்துரை செய்யும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒரு மத்திய அமைச்சர் மற்றும் மக்களவை காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி அடங்கிய குழு இரு பெயர்களைத் தேர்தல் ஆணையர்களாக அறிவிக்கும். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேர்தல் ஆணையர்களை நியமிப்பார்.

தேர்தல் ஆணையர்களைப் பரிந்துரை செய்ய பிரதமர் நரேந்திர மோடி, சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன் மேக்வால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி ஆகியோர் அடங்கிய குழு இன்று காலை கூடியது.

"தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான குழுவில் அரசின் குரல் பெரும்பான்மையாக உள்ளது. முன்னதாக, என்னிடத்தில் 212 பெயர்களைக் கொடுத்தார்கள். ஆனால், நியமனத்துக்கு 10 நிமிடங்கள் முன்பு வெறும் 6 பெயர்களை மட்டுமே கொடுத்தார்கள். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்தக் குழுவில் இல்லை. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிடக் கூடாது என்கிற வகையில் சட்டத்தை இயற்றியுள்ளார்கள். மத்திய அரசு தங்களுக்கு சாதகமானவர்களைத் தேர்வு செய்யலாம்" என்றார்.

இறுதியாக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் தேர்தல் ஆணையர்களாகப் பரிந்துரை செய்யப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஞானேஷ்வர் குமார் கடந்த பிப்ரவரியில் மத்திய அரசின் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றார். சுக்பீர் சிங் சாந்து உத்தரகண்ட் மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்துள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in